கண் சொட்டு மருந்தில் பாக்டீரியா?

சென்னையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ள கண் சொட்டு மருந்துகளில் எதிர்ப்பு பாக்டீரியாவால் மாசுபட்டு உள்ளது என அமெரிக்காவின் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (எப்.டி.ஏ) கூறியுள்ளது. மேலும், இந்த கண் சொட்டு மருந்தால் நிரந்தர பார்வை இழப்பு அல்லது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தொற்றுநோயால் மரணம் கூட ஏற்படும். இதுவரை, கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்ட 11 நோயாளிகளில் ஐந்து பேர் பார்வையை இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நுகர்வோர், இந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதனால் பாதகமான விளைவுகளை அனுபவிப்பவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஹெல்ப்லைன்களில் புகாரளிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதையடுத்து, மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் (சி.டி.எஸ்சி.ஓ) உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பின் உறுப்பினர்கள் குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆய்வை மேற்கொண்டனர். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தொகுப்புகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகளை சேகரித்துள்ள அவர்கள், ஆய்வுக்காக, அமெரிக்காவில் இருந்து அதன் மாதிரிகளை உடனடியாக அனுப்ப எப்.டி.ஏ அமைப்பை கோரியுள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.