ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, இந்த மாற்றம் அவசியம் தேவை என கூறியுள்ளார். இதே கருத்தை பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியும் வலியுறுத்தி வருகிறார். 1951, 57, 62, 67களில் லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் ஒன்றாகவே நடைபெற்றன. பின் பல்வேறு அரசியல் காரணங்களினால் இந்த தேர்தல் முறை வழி தவறிப்போனது.
தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. இது நிலையான நிர்வாகம், மக்கள் நலப்பணிகளை பாதிக்கிறது. பல மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுவதால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய தாமதம் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட காலத்திற்குள் லோக்சபாவோ சட்ட சபையோ கலைக்கப்பட்டால் அடுத்த தேர்தலுக்கு குறுகிய காலம் இருந்தால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது நீண்டகாலம் இருந்தால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அடுத்த தேர்தல்வரை மட்டுமே இயங்கலாம் என விதிகளை கொண்டு வரலாம்.
2014 லோக்சபா தேர்தலை நடத்த 3,870 கோடி செலவானது. மாநில சட்டசபை தேர்தலுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு 10,000 கோடியும் செலவாகிறது. வேட்பாளர் செலவு, அரசியல் கட்சிகள் செலவும் உயர்கின்றன. இது லஞ்சம் ஊழலுக்கு வழிவகுக்கும். பணவீக்கம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணியாகிறது. மேலும் வாக்காளர் பட்டியல் மாற்றம், திருத்தம் போன்றவற்றில் முறைகேடுகள் கலைய ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியின் அறிக்கையில் இருந்து.