ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை துவக்கினார். இது குறித்து காமராஜ் அவர்களின் கருத்தைப் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

 

மற்றைய தலைவர்கள் எல்லாம் பக்கம் பக்கமாக அறிக்கைகள் வெளியிட்டபோது, காமராஜ் ஒரே வரியில் நறுக்கென்று, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று மிக எளிமையாக பதிலளித்தார்.

துர்நாற்றம் வீசுவது குட்டை. அபாயகரமான கழிவுகள் அடங்கியது குட்டை. குப்பைக் கூளங்கள் நிரம்பியது குட்டை. மாசு மண்டியது குட்டை. விஷ உயிரினங்களைக் கொண்டது குட்டை. குட்டையின் லட்சணங்கள் இவை.

காமராஜரின் வாசகத்தில் ‘ஒரே’ என்ற சொல் மிகுந்த கவனத்துக்குரியது. வெவ்வேறு குட்டைகள் என்று குறிப்பிடவில்லை. எனவே இரண்டு திராவிடக் கட்சிகளின் குணாம்சமும் ஒன்றே என்பதையும் இந்த ‘ஒரே’ என்ற  வார்த்தை தெளிவுபடுத்துகிறது.

‘ஊறிய’ என்ற சொல்லையும் காமராஜ் யோசனையுடன் பயன்படுத்தியிருக்கிறார்.

ஒரு குட்டையில் ஒருவர் தவறி விழுந்து விட்டால் அவரை உடனே வெளியேற்றினால் அவர் பிழைத்து விடுவார். மாறாக அதே குட்டையிலே சிக்கிக் கொண்டு விட்டால், அதிலேயே ஊறிவிட்டால் அதன் தீயவை அனைத்தும் அவருக்குள் படிந்துவிடும்.

காமராஜ் கூறிய ஒவ்வொரு சொல்லும் கோடி ரூபாய் பெறுமானம் உள்ளது.

இன்றும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிற காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி இந்த குட்டையில் ஊறிய மட்டைகளோடு தேர்தல் கூட்டணி வைப்பது காமராஜருக்கு செய்யும் துரோகம். காமராஜ் தமது வாழ்நாள் முழுவதும் திராவிடக் கட்சிகளை கடுமையாக எதிர்த்து வந்தார் என்பது வரலாறு.