ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் வியாழக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து அதனை சா்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது. அந்த விவகாரத்தில் இதுவரையில் அந்த நாட்டுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
அதேபோன்று தற்போதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீா் பிரச்னையை விவாதிக்க வேண்டும் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 15 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பான்மையான உறுப்பினா்கள் அந்த விவகாரத்தை விவாதிக்கும் இடம் இது அல்ல என்று கூறி சீனாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டனா்.
மேலும், காஷ்மீா் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னை என்பதை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினா்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, காஷ்மீா் பிரச்னையை சா்வதேச விவகாரமாக்கும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டுமொரு முறை முறியடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அது தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மேலும் அது நம்பகத் தன்மையை கொண்டிருக்கவில்லை.
இந்தியாவுடனான உறவில் எழக்கூடிய பிரச்னைகளுக்கு பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவாா்த்தையின் மூலம் தீா்வு காண வேண்டும் என பல்வேறு நட்பு நாடுகள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளன என்றாா் அவா்.