கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, 10 நாள் என்.ஐ.ஏ., காவலில் விசாரிக்கப்படும் நான்கு பேர், ஐ.எஸ்., பயங்கரவாத செயலுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என, 100 பேர் அடங்கிய பட்டியலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 28, பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள் 14 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களில், சென்னையைச் சேர்ந்த ஜமீல் பாஷா உமரி, 55; கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன், 38; இர்ஷாத், 32; சையது அப்துல் ரஹ்மான் உமரி, 52, ஆகியோரை, மார்ச் 18ல் இருந்து 10 நாள் தங்கள் காவலில் விசாரித்து வருகின்றனர்.
அவர்களை கோவைக்கு அழைத்துச் சென்று, ஜமீல் பாஷா உமரி உள்ளிட்ட நான்கு பேரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு மற்றும் அரபிக் கல்லுாரியில் ரகசிய வகுப்பு எடுத்தது குறித்து விசாரித்து வருகின்றனர். சையது அப்துல் ரஹ்மான் உமரியை, அவர் பணிபுரிந்த கோவை அரபிக் கல்லுாரிக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம். மற்ற மூவரும், பயங்கரவாத செயலுக்கான பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள். நால்வரிடமும், முதலில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின், இருவர் வீதம் விசாரணை நடந்தது. அப்போது, சையது அப்துல் ரஹ்மான் உமரி, பயங்கரவாத செயலுக்கு கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைக்கும் தலைமை பொறுப்பில் செயல்பட்டது தெரிய வந்தது. அவர்களால் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் என, 100 பேர் அடங்கிய பட்டியலை ஒப்படைத்துள்ளனர்.
அதேபோல, உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி, அங்கு பயங்கரவாத செயலுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்ததும் தெரிய வந்துள்ளது. நால்வரிடமும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.