ஐரோப்பிய நாடான அர்மேனியாவுக்கு ரூ.290 கோடி மதிப்புள்ள ஸ்வாதி ஆயுதங்களை விற்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆயுத விற்பனையில் ரஷ்யா, போலந்தை இந்தியா முந்தியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான (டிஆர்டிஓ) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் இணைந்து ஸ்வாதி ஆயுதங்களை உருவாக்கி உள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இந்த ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஸ்வாதி ஆயுதங்களை ஐரோப்பிய நாடான அர்மேனியாவுக்கு விற்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஸ்வாதி ஆயுதங்கள் ரேடார்களின் இருப்பிடத்தை அடையாளம் காணக் கூடிய திறன் வாய்ந்தவை. ஸ்வாதி ரக ஆயுதங்களை வாங்க ரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளுடன் அர்மேனியா ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இந்தியாவின் டிஆர்டிஓ தயாரித்த ஸ்வாதி ஆயுதங்களை வாங்க அர்மேனியா ஒப்புக் கொண்டது. அதன்படி, ரூ.290 கோடி மதிப்பில் (4 கோடி அமெரிக்க டாலர்) 4 ஸ்வாதி ஆயுதங்களை அர்மேனியாவுக்கு விற்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட எதிரிகளின் ராக்கெட், குண்டுகள், பீரங்கி குண்டு தாக்குதல்களை துரிதமாகவும் துல்லியமாகவும் கண்டறிந்து தானியங்கி முறையில் அழிக்க வல்லவை. ஒரே நேரத்தில் பல தளங்களில் இருந்து ஏவப்படும் ஆயுதங்களையும் எதிர்கொள்ளும் விதமாக ஸ்வாதி ஆயுதங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
அர்மேனியாவுடன் ஏற்பட்டிருக்கும் இந்த ஆயுத ஒப்பந்தம், இந்திய ஆயுதங்களுக்கு புதிய சந்தையை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளை விடவும் இந்திய ஆயுதங்கள் விலை குறைந்தவையாகவும் செயல்திறன் மிகுந்தவையாகவும் உள்ளன. அதனால் தெற்கு ஆசிய நாடுகள், லத்தின் அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுடனும் கூடிய விரைவில் ஆயுத ஒப்பந்தங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.4,500 கோடியாக இருந்த இந்திய ஆயுதங்கள் ஏற்றுமதி 2018-19-ல் ரூ.10,700 கோடியாக உயர்ந்தது. நடப்பாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஆயுத ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.