ஐந்தே முக்கால் மணி நேரத்தில் பெங்களூரு! ‘வந்தே பாரத்’ கால அட்டவணையை மாற்ற கோரிக்கை

கோவையிலிருந்து ஐந்தே முக்கால் மணி நேரத்தில், பெங்களூரு சென்று வரும் நிலையில், புறப்படும் மற்றும் பயண நேரங்களை மாற்றியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கோவை-பெங்களூரு இடையே, கடந்த ஜன.1 லிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், காலையில் 5:00 மணிக்கு, கோவையில் புறப்படுகிறது; மதியம் 1:40 மணிக்கு, பெங்களூருவிலிருந்து கிளம்புகிறது. இவ்விரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம், 6:30 மணி நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புறப்படும் நேரம் மற்றும் பயண நேரத்தைக் கணக்கிடுகையில், இந்தியாவிலேயே அதிகாலை 5:00 மணிக்குப் புறப்படும் ஒரே ரயிலாகவும், மிகவும் மெதுவாக இயக்கப்படும் ரயிலாகவும் இந்த ரயில் பெருமை பெற்றுள்ளது.

மற்ற ரயில்களை விட, கட்டணம் இரண்டு மடங்கு அதிகமாகவுள்ள நிலையில், புறப்படும் மற்றும் பயண நேரங்களால், இந்த ரயிலுக்கான வரவேற்பு தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இரு நகரங்களிலும் புறப்படும் நேரத்தை மாற்றியமைப்பதுடன், பயண நேரத்தையும் குறைக்க வேண்டுமென்று, கொங்கு மண்டலத்திலுள்ள பல்வேறுதொழில் அமைப்புகளும், ரயில் பயனர்கள் சங்கத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்தக் கோரிக்கை, இப்போது வரையிலும் ஏற்கப்படவில்லை.

இதற்கிடையில், இந்த ரயிலில் பிப்.,1லிருந்து பயணம் செய்வதற்கான ‘புக்கிங்’ நிறுத்தப்பட்டிருந்தது.நேர அட்டவணையை மாற்றியமைப்பதற்காகவே, இது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை மாற்றாமலே, கடந்த 20ம் தேதியிலிருந்து மீண்டும் ‘புக்கிங்’ துவக்கப்பட்டது. நேற்று வரை,நேர அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், வந்தே பாரத் ரயில் துரிதமாக இயங்கும் ரயில் என்பதை உறுதி செய்யும் வகையில், இந்த ரயிலுக்குக் குறிக்கப்பட்டுள்ள நேரத்தை விட, தினமும் ஒரு மணி நேரம் முன்னதாகவே, பெங்களூரு சென்றடைகிறது. கடந்த 29ம் தேதியன்று, காலை 5:00 மணிக்கு கோவையில் கிளம்பிய ரயில், 10:40 மணிக்கே பெங்களூரு சென்றடைந்துள்ளது; நேற்று 10:45 மணிக்கே போய் விட்டது. முன்கூட்டியே சென்றாலும், மதியம் 1:40 மணிக்கு தான், அங்கிருந்து புறப்பட்டு, கோவைக்கு இரவு 8:00 மணிக்கு தான் வந்தடைகிறது. ஐந்தரை மணி நேரத்தில், பெங்களூருக்கு சென்று விடக்கூடிய ரயிலை, எதற்காக 6:30 மணி நேரம் பயணம் செய்வது போல, நேரம் நிர்ணயிக்க வேண்டுமென்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.