ஏன் இந்த தவி(ர்)ப்பு?

நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மக்கள் தாங்கள் வைத்திருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் என கூறி அதற்கு நீண்ட அவகாசமும் அளித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகவே சாமானிய மக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகம் இல்லை என்பது தான் யதார்த்தம். இதனால், பொதுமக்கள் மத்தியில் இந்த நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2,000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பணக்காரர்களும் இந்த அறிவிப்பால் பிரச்சனை என்றும் கூறி வருகின்றனர். இந்த சூழலில், டாஸ்மாக் கடைகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதையும் மீறி 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை பொதுமக்கள் வரவேற்றனர்.

ஏனெனில், ரூ. 500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபோது டாஸ்மாக், தமிழக ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களின் உண்டியல் பணம், பேருந்து வருமான கலெக்ஷன்கள் உள்ளிட்டவற்றின் மூலம் பல அரசியல்வாதிகளும் வணிகர்களும் தங்களது கருப்புப் பணத்தை மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்தன. அந்த நிலை மீண்டும் வரலாம் என்பதால் டாஸ்மாக் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக மக்கள் கருதினர். ஆனால், மக்களின் இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக “டாஸ்மாக் கடைகளில் ரூ. 2,000 வாங்க கூடாது என்பது முற்றிலும் தவறான செய்தி. இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை” என்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2,000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை குறித்து பேசுகையில், “இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார். தமிழக நெட்டிசன்கள், ‘தி.மு.க.வின் முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த ஆடியோவை மீண்டும் வெளியிட்டு, புதிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு ஏன் இந்த பதற்றம்?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.