உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை ரத்து

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பாணை வாபஸ் பெறப்படுவதாகவும், புதிய அறிவிப்பாணை இன்று மாலை வெளியிடப்படும் எனவும் தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கும் எனவும், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிச.,06) துவங்கும் எனவும் தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் வார்டு வரையறை விவகாரம் தொடர்பாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட், திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நகர்புறங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்காமல், ஊரக பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலைய திமுக தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்றவைகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் எனவும், 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் வார்டு வரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கும் என கூறப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு காரணமாக ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியிடப்படும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் புதிய அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட வாய்ப்பு இல்லை எனவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முழுமையாக படித்து பார்த்த பிறகே புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் எனவும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று புதிய அறிவிப்பாணை வெளியிடப்படாவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி டிச.,27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காது. இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படாததால் தற்போதுள்ள சூழலில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடப்பது சந்தேகம் என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.