நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் உலக அளவில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி அறிவோம்…
உலக அரங்கில் சங்க துவக்கம்
பாரதம் உலகிற்கு அளித்த கொடைகள் ஏராளம். ஆன்மிகம், அறிவியல், வாழ்வியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் பாரதத்தின் பங்களிப்பு உள்ளது. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்கிறது ஔவை மூதாட்டியின் கொன்றை வேந்தன்.
புராண காலம் முதல் இன்று வரை பல்லாயிரம் ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களுக்காக பாரதத்திலிருந்து உலகின் பிற இடங்களுக்குச் சென்றவர்கள், ஒரு வகையில் கலாச்சாரத் தூதுவர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் ஊறியிருந்த கலாச்சாரம், மரபுகள், நுண்கலைகள், வாழ்க்கை முறை, யோகா, வணிகம் மற்றும் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
இவ்வாறு சென்றவர்களுக்கு, ஏகாதிபத்ய விரிவாக்க மனப்பான்மை இருக்கவில்லை; மாறாக, நமது கலாச்சாரம் வலியுறுத்துவது போல அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மனப்பான்மையே இருந்தது. இதைப் போல் தான் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களும், தங்களது வாழ்வில் கற்றதை எல்லாம் செல்லும் திசைகளுக்கு எல்லாம் எடுத்துச் சென்றனர்.

சங்கப் பொறுப்பாளர்கள் பணி நிமித்தமாக செல்லும் இடங்களில், சங்கப் பணியினைத் துவங்கினார்கள். பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஜகதீஷ் சந்திர ஷார்த்தா, நல்ல ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு சங்கப் பணியும் செய்து வந்தார்.
அம்ரித்ஸரில் ஆசிரியர் பணியில் இருந்த போது, ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஆசிரியர் பணிக்கான விளம்பரம் கண்டார். கென்யா பள்ளியிலிருந்து அழைப்பு வந்ததை அடுத்து, 1946 செப்டம்பர் மாதம், எஸ்.எஸ் வாஸ்னா என்ற கப்பலில் மும்பையிலிருந்து கென்யா நகரமான மொம்பாஸாவிற்கு பயணமானார்.
கப்பலின் மேல்தட்டில் சங்கப் ப்ரார்த்தனைப் பாடச் சென்ற ஜகதீஷ் சந்திர ஷார்த்தா, அங்கு சங்க சீருடையில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த மானெக் லால் அவர்களைக் கண்டார். இருவரும் அடுத்த 15 நாட்கள் கப்பலில் சங்கப் ப்ரார்த்தனைப் பாட, இது தான் பாரதம் அல்லாது, கடலினை கடந்து பாடிய முதல் சங்கப் ப்ரார்த்தனை.
அந்த இருவரோடு, மேலும் 15 நபர்கள் இணைந்தனர். மொம்பாஸாவை கப்பல் சென்றடைந்த போது, 17 நபர்களாக எண்ணிக்கை உயர்ந்தது. செப்டம்பர் 1946ல் துவங்கியது, இன்று வரை பரந்து விரிந்துள்ளது. சங்கப் ப்ரார்த்தனை கப்பலில் பாடப்பட்டாலும், முறையே 1947 ஜனவரி 14ம் தேதி புனித பொங்கல் திருநாள் அன்று ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் சந்திப்பான ஷாகா நைரோபியில் தொடங்கியது. பின்னாட்களில் ஒரு அமைப்பு வடிவம் பெற்று “பாரதிய ஸ்வயம்சேவக சங்கம்” (பி.எஸ்.எஸ்) என்ற பெயர் பெற்றது.
1947 முதல் 1957 வரையிலான காலகட்டத்தில், இத்தகைய செயல்பாடுகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வேரூன்றத் தொடங்கின. அதே நேரத்தில், வெளிநாட்டுச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக ஸ்ரீ லக்ஷ்மண் ஸ்ரீசங்கர் பிடே என்ற சங்கப் பிரச்சாரகர் அனுப்பப்பட்டார்.
ஆப்பிரிக்காவின் நைரோபியில் தொடங்கிய இந்த இயக்கம், இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டரில் தலைமை அலுவலகத்துடன் உலகளவில் விரிவடைந்தது.

தற்போது “விஷ்வ விபாக்” பல்வேறு நாடுகளில் ஒற்றுமை, நல்லிணக்கம், அந்தந்த நாடுகளின் சட்டத்திற்குட்பட்ட செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
அந்தந்த நாடுகளின் இறையாண்மையை மதித்து, உலக அமைதியை உறுதி செய்துள்ளது. நமது “மகா உபநிடதம்” மற்றும் “ஹிதோபதேசம்” போன்ற ஆன்மீக நூல்களில் காணப்படுவது போல, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற நமது கண்ணோட்டம், உலகத்தை ஒரே குடும்பமாக ஆக்கியுள்ளது.
1946ல் துவங்கப்பெற்று, தற்போது 79 ஆண்டுகள் நிறைவடைய உள்ள தருவாயில், 60க்கும் மேற்பட்ட நாடுகளில், இன்று வெவ்வேறு பணிகள் நடைப்பெற்று வருகிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், விஞ்ஞானிகள் என முக்கியப் பிரமுகர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது முத்தாய்ப்பானது. சில நாடுகளில் இதைப் போல பயிற்சி வகுப்புகளை அந்த நாட்டு இளைஞர்களுக்கு அளித்து வருகிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் விஷ்வ சங்க ஷிபிர், அதாவது விஷ்வ விபாக் பணி நடைபெற்று வரும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான மாநாடு, 1990 முதல் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 9 அன்று அனுசரிக்கப்படும் “பிரவாசி பாரதிய திவஸ்” என்பது, பாரதத்தின் முன்னேற்றத்திற்கு வெளிநாட்டில் வாழும் நம்மவர்களான பாரதிய சமூகத்தின் பங்களிப்பைக் கொண்டாடுகிறது. ஹிந்து நாகரிக விழுமியங்களில் வேரூன்றிய இந்த பாரதியர்கள், தாங்கள் வசித்துவரும் நாடுகளில் பொறுப்பான குடியுரிமையை நிலை நிறுத்துகிறார்கள்.
உலகளாவிய அனுபவம் மற்றும் நாகரிகப் பொறுப்பின் இந்த ஒருங்கிணைப்பு டிசம்பர் 25-−29 ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் நடைபெற்ற 7வது விஸ்வ சங்க சிபிர் 2025ல் நடைபெற்றது. அங்கு 71 நாடுகளைச் சேர்ந்த, 1650க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் “தர்மே சர்வம் பிரதிஷ்டிதம் (அனைத்தும் தர்மத்தால் நிறுவப்பட்டது)” என்ற தலைப்பில், தர்மமே நாகரிகத்தின் அடித்தளம் என்பதை உறுதிப்படுத்தினர்.
மதிப்பிற்குரிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத்,
ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே, முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்ரீ ராம சந்திர மிஷனின் ஆன்மிக குரு கமலேஷ் டி பாட்டில் என பலரும் கலந்துகொண்டு வழிகாட்டினார்கள்.

சங்கத்தின் நூற்றாண்டு மற்றும் வெளிநாடுகளில் சங்க செயல்பாடுகள் தொடங்கியதன் 79-வது ஆண்டு ஆகிய இந்த காலகட்டத்தில், பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்ட அமைப்புகள் அவரவர் தொடங்கப்பட்ட ஆண்டினைக் கொண்டாடத் தொடங்கியுள்ளன.
உதாரணமாக, ஜப்பான் “ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம்” தங்களின் 10 ஆண்டுகால சேவையைக் கொண்டாடியுள்ளது, அதே சமயம் மியான்மரின் (பர்மா) “சனாதன தர்ம ஸ்வயம்சேவக் சங்கம்” தனது 75-வது ஆண்டைக் கொண்டாடியுள்ளது.
மியான்மரைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ மங்கல் ஜெயின் அன்றைய காலகட்டத்தில் பாரதம் வந்து கல்வி கற்றார். அப்போது ஸ்வயம்சேவக்கான அவர் மியான்மர் சென்று, சங்கப் பணியினை துவங்கினார். அங்கு “சநாதன தர்ம ஸ்வயம்சேவக சங்கம்” என்ற பெயரில் பணி துவங்கியது. மியான்மரில் இன்றும் அவரது நினைவாக “மங்கல் சேவாஷ்ரமம்” என்ற பெயரில் அறக்கட்டளையானது சேவை செய்து வருகிறது.
பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள: https://sdssmyanmar.org/en/category/diamond-jubilee-75yr/ பார்க்கவும். நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் மற்றும் சேவைப்பணிகளைப் பற்றி https://hssuk.org/ websiteல் உள்ள தகவலை பார்த்து அறிந்துக் கொள்ளலாம்.
கட்டுரையாளர்: – E. தண்டபாணி
இணை ஒருங்கிணைப்பாளர்,
விஷ்வ விபாக், சென்னை