சோமலெ என்ற புனைபெயரில் 60க்கும் மேற்பட்ட நூல்கள், குறிப்பாக பயணநூல்கள், தமிழுக்குத் தந்தவர் சோம இலக்குமணன் செட்டியார். 1921ல் பிறந்த இவரது நூற்றாண்டு பிப்ரவரி 11 அன்று தொடங்கியது. உரிய நிகழ்ச்சிகளும் தொடங்கின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பின்வருமாறு சோமலெயை வாழ்த்தியுள்ளார்:
“எல்லா நாடும் தன்நாடாய்
எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெல்லாம்
நாளும் தேடி தமிழ் மக்கள்
பல்லார் அறிய செந்தமிழில்
பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வென்றிடுவான்
சோம லக்கு மணன்வாழ்க!“
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006ல் வந்தது. அப்போது சென்னையில் குருஜியின் கருத்துரைகள், பணிகள் குறித்த 12 தொகுதிகள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்தி
ருந்த அன்றைய ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் கே.எஸ். சுதர்சன் நிகழ்ச்சிக்கு முன்தினம் சென்னை மாநகரப் பெரியோர்கள் சந்திப்பில் உரையாற்றினார். அவர் உரை நிகழ்த்துமுன் பலநாடுகளில் ஆர்.எஸ்.எஸ் அன்பர்களை ஒருங்கிணைக்கும் பணிபுரிந்து வந்த ரவிக்குமார் என்ற ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் எழுதியிருந்த ‘க்ளிம்ப்ஸஸ் ஆப் ஹிந்து ஜீனியஸ்‘ என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் இருந்து பின்வரும் ஊக்கமூட்டும் சம்பவத்தை, புத்தகத்தை அறிமுகப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் அன்பர் ஒருவர் விவரித்தார்: “இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரம். 1940களின் தொடக்கத்தில் ஜப்பானியப் படைகள் பர்மாவைத் தாக்கின. ஏராளமான மக்கள் பர்மாவில் இருந்து வெளியேறினார்கள். குறிப்பாக அங்கு லேவாதேவி (அடகு) தொழில் செய்து வந்த நகரத்தார் அன்பர்கள் வெளியேறினார்கள்.
வரும்போது பர்மியர்கள் தங்களிடம் அடகு வைத்திருந்த நகைகளையும் எடுத்து வந்தார்கள். 1,000 மைல் நடையாய் நடந்து செட்டி நாடு (தற்போதைய சிவகங்கை மாவட்டம்) வந்து சேர்ந்தார்கள். 1942ல் அந்த வட்டாரத்தில் கொள்ளையர் பயம். கோர்க்காக்களை அமர்த்தி நகைகளை பாதுகாத்தார்கள். பிறகு பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நகைகளை பர்மாவுக்கு திருப்பி எடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு நகையையும் உரியவரிடம் பழுதில்லாமல் ஒப்படைத்தார்கள்.
திரும்பப் பெற்ற பர்மியர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆனால் இந்த அற்புத நேர்மையின் ஊற்றுக் கண்ணாக இருப்பது வேலங்குடி என்ற நாட்டுக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு சிலா சாசனம் (கல்வெட்டு). அதுதான் நகரத்தாரின் அந்த நேர்மைக்கு மூலகாரணம்.”
’செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற சோமலே எழுதிய நூலிலிருந்து தான் ரவிக்குமார் இந்த சம்பவத்தை தனது நூலில் எடுத்தாண்டிருந்தார். ஆன்மிக சக்தி ஹிந்துக்களின் வாழ்வில் அற்புதமான நேர்மையை நிலை நாட்டிவருவதை அந்த சம்பவம் சோமலேயின் எழுத்தில் அற்புதமாக வெளிப்பட்டது. இந்த சம்பவத்தை விவரிக்கக் கேட்டதும் சென்னை நகரின் பெருமக்கள் கூடியிருந்த அந்த அவையே கரவொலியால் அதிர்ந்தது. கலையும் இலக்கியமும் இந்த மண்ணின் கலாச்சாரத்தை மனதைத் தொடும் விதத்தில் எடுத்துக்கூற முடியும் என்று இந்தத் தகவலால் நிரூபித்திருந்தார் சோமலெ.