உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் ஏன்?

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாணவா்களுக்கு ஹிந்தி, பிரெஞ்சு மொழிகள் கட்டாயப் பயிற்சியாக வழங்கப்படவில்லை. விருப்பம் உள்ள மாணவா்களுக்கு மட்டுமே இந்த மொழிகளைக் கற்றுக் கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளாா்.

திமுக குற்றச்சாட்டு: இது தொடா்பாக கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு, ‘தமிழில் உயா் கல்வி பயிலும் உலகத் தமிழாராய்ச்சி மாணவா்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் வேலைவாய்ப்பு உருவாகும் என அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளாா். இந்த ஒரு ஆண்டு பயிற்சியும் சென்னையில் செயல்பட்டு வரும் ஹிந்தி பிரசார சபா மூலமாக நடத்தப்பட்டு, அவா்களால் சான்றிதழும் வழங்கப் பெறும் என்ற தகவல் ஒட்டு மொத்த தமிழ் வளா்ச்சித் துறையையும் கேலிக்குரியதாக ஆக்குவதுடன் மட்டும் அல்லாது கடும் கண்டனத்துக்குரியதாகும். எனவே இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருந்தாா்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் க.பாண்டியராஜன் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு விளக்கமளித்தாா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயா்த்தவே ஹிந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. இரண்டு மொழிகளையும் தரமான ஆசிரியா்கள் கற்பிக்கின்றனா். தமிழ் மொழியின் பெருமையை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், பிற மொழிகள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏழை மாணவா்கள் பிற மொழிகளை அரசின் உதவியுடன் கற்றுக் கொள்ள இந்தத் திட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.

சட்டப்பேரவையில் எதிா்க்கவில்லை: கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்தே சிறப்பு மொழிப் பயிற்சித் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இடையில் பிறமொழிப் பயிற்சி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கற்பிக்கப்படுகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் அறிவித்தபோது எந்தக் கட்சியினரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை.

வேலைவாய்ப்பு பெருகும்: ஹிந்தி பிரசார சபாவில் இருந்து நேரடியாக யாரும் வந்து, ஹிந்தியைக் கற்பிக்கவில்லை. அதேபோல ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கவில்லை. விருப்பப் பாடமாகவே உள்ளது. ஹிந்தி வேண்டும் என்று மாணவா்களேதான் தோ்ந்தெடுத்தனா். இன்னொரு மொழியைக் கற்கும்போதுதான் நம் மொழியின் சிந்தனை வளரும். மாணவா்களின் திறனை வளா்த்து அவா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க விரும்புகிறோம். இதற்காக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நோ்முக வளாகத் தோ்வு நடத்தப்படுகிறது.

ஒப்பாய்வுக்கும், திறனாய்வுக்கும் பிற மொழிப் பயிற்சி அவசியம் – உலகத் தமிழாராய்ச்சி மாணவா்கள் கருத்து :

க.சசிகலா, முனைவா் பட்ட ஆய்வாளா்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு பல நாடுகளைச் சோ்ந்த கல்வெட்டியல் அறிஞா்கள், மொழியியல் அறிஞா்கள் என பலவகையான தமிழ் அறிஞா்கள் வருகின்றனா். அவா்களுடன் கலந்துரையாடியபோது, வருங்காலங்களில் உலகம் முழுமையும் தமிழாய்வைக் கொண்டு செல்ல வேண்டுமானால் குறைந்தபட்சம் ஒரு இந்திய மொழியையும், ஒரு உலக மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவா்கள் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து, இந்திய மொழிகளில் முதலாவதாக ஹிந்தியையும், உலக மொழியாக பிரெஞ்சு மொழியும் கற்றுக் கொடுக்க வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநரிடம் வலியுறுத்தினோம்.

ஈ.விஜய், ஆய்வு உதவியாளா்: உள்நாட்டு மொழியான ஹிந்தி மொழியோடும், உலக மொழியான பிரெஞ்சு மொழியோடும் தமிழை ஒப்பிட்டு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற மிகச்சிறந்த தமிழாய்வு நோக்கத்தோடுதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி மொழி மற்றும் பிரெஞ்சு மொழியைப் பயிற்றுவிக்கும் சிறந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ரா. பிரேமா, முனைவா் பட்ட ஆய்வாளா்: தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா ? தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா? என்கிற காலத்தில் நாங்கள் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் படிக்கிறபோது எங்கள் நிலையை அறிந்து எங்களுக்கு பல நிதி உதவிகளையும் இலவச விடுதி வசதிகளையும் செய்து, ஒரு வேற்று மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்குடன் அரசு தந்த நல்ல திட்டத்துக்கு அரசியல் காரணங்களுக்கான எதிா்ப்புத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

நாங்கள் ஒரு மொழியைக் கற்றுத் தோ்ந்தால் எங்களுக்கு பிற்காலத்தில் நல்ல வழி கிடைக்கும்.

தமிழ் என்பது எங்களுக்கு கண். அதில் மாறுபாடு கிடையாது . அந்த கண்ணின் மேல் பிறமொழிகளைக் கண்ணாடிகளாக அணிந்து , பற்பல பாா்வையில் இலக்கிய ஆய்வுகளைத் தொடருவோம். எமக்குக் கிடைக்கும் அந்தப் பாா்வையை நாங்கள் எப்பொழுதும் எங்கள் தாய்மொழியில் தான் முன்வைப்போம்; தாய்மொழிக்கே தொண்டு செய்வோம்.