உறுதி!குடியுரிமை திருத்த சட்டத்தில் மாற்றமில்லை – பின்வாங்க முடியாது என மோடி திட்டவட்டம்

”ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது போன்றவை, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. நாடு மற்றும் மக்கள் நலன் கருதி, இந்த முடிவுகளை, மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த முடிவுகளை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. யாருடைய நிர்ப்பந்தங்களுக்கும், மத்திய அரசு அடிபணியாது,” என, பிரதமர் நரேந்திர மோடி, திட்டவட்டமாகதெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி தொகுதியின் எம்.பி.,யாக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வாரணாசி தொகுதிக்கு, பிரதமர் மோடி நேற்று வந்தார். வாரணாசியில், அவரை, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உட்பட பலர் வரவேற்றனர்.

பின், ஸ்ரீ ஜகத்குரு விஸ்வர்தியா குருகுலத்தின் நுாற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, 19 மொழிகளில் ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்தத்தையும், மொபைல் செயலியையும் பிரதமர் வெளியிட்டார்.தொடர்ந்து, வாரணாசி தொகுதியில், 1,254 கோடி ரூபாய் மதிப்பில், 50 வளர்ச்சி திட்டங்களை, துவக்கி வைத்து, பிரதமர் மோடி அடிக்கல்நாட்டினார். மூன்று ஜோதிர்லிங்க ஸ்தலங்களை இணைக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் இயக்கப்படும், ‘காசி – மஹாகாள்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் துவக்கி வைத்தார்.

63 அடி உயர சிலை

இதன்பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சிந்தனையாளரும், பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் தலைவருமாக இருந்த, பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின், 63 அடி உயர சிலையை, மோடி திறந்து வைத்தார்.இந்த வளாகத்தில், கைவினை பொருட்கள் கண்காட்சியையும், பிரதமர் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய நாட்டை யாரும் உருவாக்கவில்லை. அதிகாரத்தாலும் உருவாக்கப்படவில்லை. கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட தேசம் இது. அதிலும், கலாசாரத்தில் பின்னி பிணைந்த மக்களால், உருவாக்கப்பட்ட தேசம் இது. அதனால் தான், நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் அடையாளப்படுத்தும் வகையில், சிறந்த கலைகள், ஓவியங்கள், பொருட்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள சிறந்த கலைகள், ஓவியங்கள், பொருட்களை, ஒரே இடத்தில் பார்க்கும் வகையில், கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. கைவினைப்பொருட்களில், நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகவே, சிறந்து விளங்கி வந்துள்ளோம், நமது வர்த்தகர்கள், நம் நாட்டின் தயாரிப்புகளை, உலகம் முழுவதும்பிரபலப்படுத்தியுள்ளனர். நம்மிடம் திறமைக்கு பஞ்சமில்லை. வளத்துக்கும் குறைவில்லை.

ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய எண்ணம் தான், நம்மிடம் குறைவாக உள்ளது. 130 கோடி மக்களும், ஒருங்கிணைந்து பணியாற்றினால், உலகின் குருவாக பாரதம் மாறும். இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகள் போன்ற எங்களது திட்டங்கள், ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது.

வாரணாசியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், உங்களுக்கு சேவையாற்ற, என்னை, சிவபெருமான் ஆசிர்வதித்தது தான். மருத்துவமனை, பள்ளி, சாலைகள், பாலங்கள், குடிநீர் தொடர்பாக, 1,244 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், இப்போது துவக்கப்பட்டுள்ளன.

ஊக்க சக்தி

நாட்டின் மிகப் பெரும் சிந்தனைவாதியாக மதிக்கப்பட்ட, தீன்தயாள் உபாத்யாயாவின், 63 அடி உயர சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய சிலை, இனி வரும் தலைமுறையின ரையும் ஈர்க்கும். அவரின்எண்ணங்கள் மற்றும் கொள்கைகள், அனைவரையும் கவரும். தீன்தயாளின் ஆன்மா, எங்களுக்கு எப்போதும் ஊக்க சக்தியாக இருந்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அவர் காட்டிய வழியில், நாங்கள் பலநடவடிக்கைகள் எடுத்து உள்ளோம்.

நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல், அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சியை அதிகரித்துள்ளோம். நாடு முழுவதும், 100 மாவட்டங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில், வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.