மார்கழி பிறந்தாலே ஊரெங்கும் திருவிழாதான். ஒரு புறம் திருப்பாவை , திருவெம்பாவை, பஜனை பாடல்கள் என பக்தியில் திளைத்திருக்கும். மறுபுறம் சங்கீத சீசனில் இசை, நடன கச்சேரிகளில் லயித்திருக்கும் காலம் இது. இந்த விழாக்காலத்தில் தமிழிசைக்கும் தனியிடம் உண்டு.
தமிழிசை என்றாலே நம் நினைவுக்கு வர வேண்டியவர்கள் தமிழிசை மூவர்:முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தா பிள்ளை. வெவ்வேறு காலகட்டங்களில் சீர்காழியில் வாழ்ந்த இசை அறிஞர்கள். இசை மூலம் தமிழுக்கும் தமிழ் மூலம் இறைவனுக்கும் தொண்டாற்றியவர்கள்.
தமிழிசை என்றால் ஏதோ பக்திக்கு சம்பந்தமில்லாத தனியிசை என்று நிறுவும் போக்கு உள்ளதே, தமிழிசைக்கு அதுதான் அர்த்தமா? நிச்சயமாக இல்லை. இறை இல்லாத இசை ஏது அப்போது? தமிழிசை மூவரின் பாடல்களிலுமே கருப்பொருள் இறைவன் மட்டுமே. அருணாசலக் கவிராயர் முழு நீள ராமாயணத்தையே ‘ராம நாடக கீர்த்தனை’ என பாடல் வடிவில் இயற்றினார்.
தமது பக்தியின் வெளிப்பாடாகத்தான் பாடல்கள் இயற்றினர் என்பதே உண்மை.
ஏறத்தாழ 25 கீர்த்தனைகள் சிதம்பரம் பற்றி வியந்து வியந்து உருகி உருகி இயற்றியுள்ளார் மாரிமுத்தா பிள்ளை.
“நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமே மதில் சுவர்களாகவும் நான்கு வேதங்களே கோபுரமாகவும் அமையப்பெற்ற தெய்வீக ஸ்தலம் இந்தத் தில்லை” என்று பாடுகிறார்.
இது உயர்வு நவிற்சி இல்லை. கவிஞர் உணர்ந்த உண்மை! இனி ஆதி மும்மூர்த்திகள் தமிழிசை மூவரில் மூத்தவர் முத்து தாண்டவர். நடராஜனின் ஆடல் அழகை நினைத்து தாண்டவர் எனப் பெயரிட்டனர் பெற்றோர்.
வாலிபப் பிராயத்தில் இனம் தெரியா நோயினால் பீடிக்கப்பட்டதால் உற்றாரும், மற்றோரும் அவரை ஒதுக்கிவிட்டனர். சீர்காழி கோயிலில் தஞ்சமடைந்த தாண்டவரை தில்லைக்குச் சென்று நடராஜனை வணங்கி அவர் மேல் பாடல் புனையுமாறு பணித்தாள் ஒரு சிறுமி.
தனக்கு அந்தத் திறமை இல்லையே என்று தாண்டவர் கலங்கியபோது ஒவ்வொரு நாளும் முதலில் காதில் விழும் வார்த்தையை வைத்தே கவியெழுதுமாறு ஆசீர்வதித்து மறைந்தாள் சிறுமி. அப்படி அவர் பாடியதுதான் “பூலோக கைலாயகிரி சிதம்பரம்”.
என்ன அதிசயம்….. பாடி முடித்ததும் அவர் நின்றிருந்த இடத்தில் ஐந்து பொற்காசுகள் தோன்றின! இதே போல் முத்துத் தாண்டவரின் வாழ்வில் தில்லைநாதன் நிகழ்த்திய திருவிளையாடல் ஏராளம். ஒரு முறை நாகம் இவரைத் தீண்ட “அரு மருந்தொன்று தனி மருந்து இது, அம்பலத்தே கண்டேனே” என்று பாடப் பாட, விஷம் இருந்த இடமே தெரியவில்லை.
தமிழிசை மூவரின் பாடல்களைக் காணும்போது பக்தியிசையே தமிழிசையாகப் பரிமளிக்கிறது என்று புரிகிறது. அது மட்டுமா? சிவனும் ராமனும், கிருஷ்ணனும் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர் பல நூற்றாண்டுகளாக தமிழர்களால் பெரிதும் போற்றி கொண்டாடப்பட்ட தெய்வங்கள் தாம் என்பதும் தெளிவாகிறது