திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ‘திருவண்ணாமலையில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க அம்மணி அம்மன் மடத்தை நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இடித்த ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்தும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் செயலை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வரும் 29ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். திருவண்ணாமலையை ஆன்மிக நகரமாக அறிவிக்க வேண்டும். திருவண்ணாமலை மற்றும் மாட வீதிகளில் ஹிந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்பில் இருக்கும் கோயில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடங்கள் மற்றும் காலியிடங்கள் மீட்கப்பட வேண்டும். திருவண்ணாமலையை அடுத்த ஆனந்தல் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். திருக்கோவிலூர் சாலையில் உள்ள பவித்திரம் புதூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்கத்தில் 600 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு கட்டண தரிசனத்தை நீக்கிவிட்டு அனைத்து பக்தர்களுக்கும் கட்டணமில்லா தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.