இந்து அரசர்களை பற்றி மட்டும் அவதூறாக பேசும் ராகுல் காந்தி, முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘ஒரு காலத்தில் அரசர்களும், ஆட்சியாளர்களும் மக்களின் நிலங்களை பறித்தனர். இதை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தியது. நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, ஜனநாயகத்தை காப்பாற்றியது. அரசியலமைப்பு சாசனத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியது’’ என்றார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மாள்வியா கூறும்போது, ‘‘நாட்டை ஆண்ட ராஜபுத்திர மன்னர்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில், கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர்மோடி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில்உள்நாட்டிலேயே மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இந்தியாவின் சாதனைகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசுகின்றனர்.
கர்நாடகாவின் ஹூப்ளியில் நேஹா என்ற இளம்பெண்ணை, பயாஸ் என்பவர் கடந்த 18-ம் தேதி படுகொலை செய்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, இதுகுறித்து துளியும் கவலைப்படவில்லை. வாக்கு வங்கிஅரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது. பெங்களூருவில் உள்ள ஓட்டலில் சமீபத்தில் குண்டு வெடித்தது. ஆனால், குண்டுவெடிப்பு சம்பவத்தை காங்கிரஸ் அரசு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, ‘ஓட்டலில் குண்டு வெடிக்கவில்லை, சிலிண்டர்தான் வெடித்துள்ளது’ என்றுகாங்கிரஸ் அரசு விளக்கம் அளிக்கிறது.
இந்து அரசர்களை, சர்வாதிகாரிகள் என்று அவதூறாக பேசி உள்ளார் காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி). மக்களின் நிலங்களை இந்து மன்னர்கள் அபகரித்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சத்ரபதி சிவாஜி, ராணி சின்னம்மா உள்ளிட்ட பல்வேறு இந்து மன்னர்களை அவர் அவமதித்து உள்ளார். வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு பேசி வருகிறார்.
முகலாய மன்னர் அவுரங்கசீப், நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை இடித்தார். ஏராளமான பசுக்களை கொன்று குவித்தார். ஆனால், அவுரங்கசீப் மற்றும் இதர முகலாய மன்னர்களின் கொடூரங்கள் குறித்து காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) ஒரு வார்த்தைகூட பேசுவது இல்லை. முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன் என்பதற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக, கடந்த 10 ஆண்டு காலம் நல்லாட்சியை வழங்கி உள்ளது. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், மக்களின் சொத்துகளை அபகரித்து தங்களுக்கு பிடித்தமான சமூகத்தினருக்கு அளிப்பார்கள். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸின் அனைத்து சதி திட்டங்களையும் பாஜக முறியடிக்கும்.
காங்கிரஸ் இளவரசர், கேரளாவின்வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ஆதரவை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். தீவிரவாத அமைப்புகளுடன் கைகோத்து செயல்படும் அவருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.