டெல்லியில் நடைபெற்ற இந்திய விண்வெளி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் விண்வெளி வீரர் தோமஸ் பெஸ்கே நன்றி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் தோமஸ் பெஸ்கே. இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இரண்டு முறை பயணம் செய்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்தபோது, இவர் இந்தியாவை படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இரவு நேரத்தில் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியநகரங்கள் எவ்வாறு ஜொலிக்கின்றன என இவர் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து படம் பிடித்து வெளியிட்டவர்.
இவரை கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் சென்றிருந்தபோது பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விண்ணுக்கு மனிதர்களுடன் விண்கலத்தை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் சாம் மானெக்ஷா மையத்தில் இந்திய விண்வெளி மாநாடு கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்தியா வரும்படி பிரான்ஸ் விண்வெளி வீரர் தோமஸ் பெஸ்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று அவரும் இந்திய விண்வெளி மாநாட்டில் கலந்து கொண்டார். இது குறித்து பெஸ்கே கூறியதாவது:
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரதமர் மோடியை சந்திக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றேன். நாங்கள் 30 நிமிடங்கள் பேசினோம். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம், அது இளைஞர்களின் கற்பனையை எவ்வாறு ஈர்க்கிறது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். நிலவரத்தை அவர் நன்கு அறிந்துள்ளார். நாட்டுக்காக அவர் முக்கியமான நோக்கங்களை கொண்டுள்ளார். நாட்டின் விண்வெளித் துறையில் அவர் அக்கறைசெலுத்துவது பாராட்டத்தக்கது.
இந்தியாவில் நடைபெற்ற விண்வெளி மாநாட்டில் பங்கேற்க என்னை அவர் அழைத்ததற்கு நன்றி. ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், மக்கள் பெரிதாக கனவுகாணும்போது அவர்கள் உலகையே மாற்றுகின்றனர். இந்திய விண்வெளி வீரருடன் விண்ணுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு எனக்கும் உள்ளது. விண்வெளித்துறையில் இந்தியா ஆர்வமாக உள்ளது ஆச்சர்யமாக உள்ளது. இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீரர்கள் மற்றும் இளம்விஞ்ஞானிகளுடன் நான் கலந்துரையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது. விண்வெளித்துறையில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு சிறந்த பலன்களை அளிக்கும். இவ்வாறு தோமஸ் பெஸ்கே கூறினார்.