‘ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருப்போம்’ என, ஐரோப்பிய, எம்.பி.,க்கள் குழு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்ப இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். நிலைமை சீரடைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
எனினும் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியா வந்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்திக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் 27 எம்.பி.க்களில் 4 பேர் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. 4 எம்.பிக்களும் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.
ஸ்ரீநகர் வந்து 23 எம்.பி.க்கள் குண்டு துளைக்காத வாகனங்களில் அமரவைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள சூழலை விளக்கினர்.
இந்தநிலையில் அவர்கள் இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது காஷ்மீரில் அமைதி திரும்ப இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தனர்.