உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்திய கடற்படையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உட்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களில் இவர்கள் பங்கு பெற்றனர். இந்நிலையில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இவர்கள் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆக., மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமின் மனு பல்வேறு முறை நிராகரிக்கப்பட்டன.
இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இது குறித்து, நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கத்தார் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது. முழுமையான தீர்ப்பு நகலுக்காக காத்திருக்கிறோம். தண்டனை பெற்ற அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் சட்டக்குழுவுடன் தொடர்பில் உள்ளோம். சட்ட ரீதியிலான தீர்வு காண அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து கவனித்து வருகிறோம். நம் அதிகாரிகளுக்கு துாதரக மற்றும் சட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படும். இது தொடர்பாக கத்தார் நாட்டு அதிகாரிகளுடன் பேச உள்ளோம்.