மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் முயற்சி மேற்கொண்டார். அக்கூட்டணிக்கு ‘இண்டியா’ என பெயர் சூட்டப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், நிதிஷ் குமார் நேற்று கூறியதாவது:
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்ற பெயர் வேண்டாம் என்றும் வேறு பெயர் வைக்கலாம் என்றும் நான் வலியுறுத்தினேன். ஆனால் என்னுடைய கருத்தை காங்கிரஸும் பிற கட்சிகளும் ஏற்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி இண்டியா என்ற பெயரை அறிவித்தனர்.
அத்துடன் கூட்டணியின் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று வரை எந்தக் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்படவில்லை. இதனால்தான் அக்கூட்டணியில் இருந்து விலகி, நான் ஏற்கெனவே இருந்த கூட்டணியில் இணைந்தேன். எனினும் பிஹார் மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனசட்டப்பேரவையிலும் பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திஅதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி உரிமை கோர முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்