ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்கும் கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக ஐடி துறை முதன்மை செயலர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து 82 மணி நேரம் போராடியும் மீட்க முடியாமல் குழந்தை சுஜித் வில்சன் (2) உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் மீட்புப் பணியில் பல உத்திகளைக் கையாண்டாலும்கூட இதுபோன்ற இக்கட்டான சூழலில் குழந்தையை லாவகமாக மீட்க பிரத்யேக கருவி ஏதும் இல்லாததால் சுஜித் மரணமடைய நேர்ந்தது. இது பலரின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக ஐடி துறை செயலர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் தனது முகநூல் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் உள்ள அந்தப் பதிவில்..

“அன்பு நண்பர்களே, இந்த தீபாவளி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் இதயத்தை நொறுக்கும் நாளாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் இன்னும் ஓர் இன்னுயிரை இழந்திருக்கிறோம். இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறிவிழுந்து இறப்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். ஆனால், அதற்கு மிக அவசரமான தீர்வுகள் தேவைப்படுகிறது.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்கும் அளவுக்கு செயல்படும் நிலையில் இருக்கும் கருவியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். யார் வேண்டுமானாலும் இதனைக் கண்டுபிடிக்கலாம். செயல்படும் நிலையில் இருக்கும் கருவியுடன் வாருங்கள்.
ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது என்றால். அதன் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சுட்டிக்காட்டி அதனை ஒரு பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்வதிலிருந்து கண்டுபிடிப்பைத் தொடங்கலாம்.

டாவின்சி ரோபோடிக் ஆர்ம் டைப் எனப்படும் இயந்திர பாணியில் குழிக்குள் செலுத்தப்படும் இயந்திரம் குழந்தையை அடைந்தவுடன் கைகளை விரித்து குழந்தையை அப்படியே இழுத்து மேலே கொண்டு வருவதாகவும் இருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்காக சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்.,ஸிடம் பேசியபோது, “இது ஆரம்பநிலையே. நல்ல யோசனை இருந்தால், யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். படித்திருக்க வேண்டும், பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் எந்த நிபந்தனையும் இல்லை.

அது நான் முகநூலில் குறிப்பிட்டதுபோல் கிணறு தோண்டுவதற்கு முன்பே பணியை கண்காணிப்பதிலிருந்து குழந்தையை மீட்பது வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

தமிழகத்தில் இதுபோன்ற ஆழ்துளைகள் மூடாத நிலையில் எத்தனை இருக்கின்றன எனத் தெரியவில்லை. இனிவருங்காலங்களில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டால் அதை அட்சரேகை, தீர்க்கரேகை குறியீடுடன் இணையத்தில் பதிவு செய்யும் முறை வந்தால் எங்கெல்லாம் ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன என்பதை நம்மால் கண்டுகொள்ள இயலும்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் ஒரு ப்ரான்கோஸ்கோப் கருவி எப்படி நுரையீரலுக்குள் செலுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதோ அதுபோல் நுணுக்கமானதாக சிறப்பானதாக இருக்க வேண்டும்.

ரூ.5 லட்சம் பரிசுத் தொகை என்பது நான் தற்போது முகநூலில் அறிவித்திருக்கிறேன். இதுதொடர்பான ஆவணத்தை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளேன். இப்போது இப்படி ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் அவசியத்தில் நாம் இருக்கிறோம்” என்றார்.