ஆளுநர் மாளிகையில் சென்னை மண்டலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர்களை தமிழக ஆளுநர் ரவி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிட் இந்தியா திட்டம், நுழைவு வகுப்புகளுக்கான மதிப்பீட்டு திட்டங்கள், ஒருங்கிணைந்த கல்விமுறை, படைப்பு திறனுடன் கூடிய கற்றல் முறை, மதிப்பு கூட்டப்பட்ட கல்வி, நுண்ணறிவு சிந்தனை திறன் கற்றல்முறை, மொழி திறன் வளர்ப்பு ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஆளுநர், ‘அதிகமான இளைஞர் சக்தியை கொண்ட நாடாக பாரதம் இருப்பதால், புதிய கல்வி கொள்கையை கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் அமல்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நீட், ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று, உயர்கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர கல்வி நிறுவனங்கள் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்’ என கூறினார்.