பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொல்ல முயன்ற எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு டவுன் ஹாலில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா, இளைஞர் அணித் தலைவர் சக்ரவர்த்தி சுலிபெளே உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த வருண் பூபாளம் (31) ஆனேக்கலில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். கலாசிபாளையா அருகே வருண் பூபாளத்தை 4 மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தி, ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பெங்களூரு அஞ்சேபாளையா கூலிப்படையை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரு லிங்கராஜா புரத்தை சேர்ந்த முகது இர்பான் (33), சனாவுல்லா ஷெரீஃப் (39), சையத் அக்பர் (46), சையத் சித்திக் (30), அக்பர் பாஷா (30), சாதிக் அக்பர் (39) ஆகிய 6 பேர் தங்களுக்கு பணம் கொடுத்து பாஜகவினரை கொலை செய்ய கூறியதாக தெரிவித்தனர்.
குறிப்பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இளைஞர் அணித் தலைவர் சக்ரவர்த்தி சுலிபெளேவை கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாகவும் ஆனால் ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கூட்டங்களை ஒருங்கிணைத்த ஆர்எஸ்எஸ்.பிரமுகர் வருணை கொல்ல முயன்றோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் லிங்கராஜாபுரத்தை சேர்ந்த முகமது இர்பான், சனாவுல்லா ஷெரீஃப் உள்ளிட்ட 6 பேரையும் வியாழக்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும், பாஜக பிரமுகர்களை கொல்ல கூலிப் படையினருக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதனிடையே இவ்வழக்கு நேற்று தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து முகமது இர்பான், சனாவுல்லா ஷெரீஃப் உள்ளிட்ட 6 பேரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 6 பேரையும் வரும் 20-ம் தேதி வரை தீவிரவாத தடுப்பு பிரிவு காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இரா.வினோத்