பெருநிறுவனங்கள் நுகர்வோரை ஈர்க்க விளம்பர வலைகளை வீசுகின்றன. வர்த்தகப் போட்டி நிறைந்த உலகில் இதை தவறு என்று கூறமுடியாது. ஆனால் அதே நேரத்தில் உண்மையை நிர்மூலமாக்கும் வகையில் விளம்பர வாசகங்கள் இடம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொய்யான தகவல்கள் நிறைந்த விளம்பரமும் ஒருவகையில் சுரண்டலே. இத்தகைய சுரண்டல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இதை பொதுநல ஆர்வலர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் ஹார்லிக்ஸ் மில்லட் பிஸ்கட்ஸ் என்ற பெயரில் வெளியான விளம்பரம் சர்ச்சையைக் கிளர்ந்தெழ வைத்தது. கேழ்வரகு, சோளம், கோதுமை மூன்று சிறுதானிய நன்மைகளுடன் ஹார்லிக்ஸ் மில்லட் பிஸ்கட் என்ற வாசகம் நுகர்வோரை ஈர்க்கும் வகையில் உள்ளது. ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது. கேழ்வரகும், சோளமும் மட்டுமே சிறுதானியங்கள். கோதுமை, சிறுதானிய வகைப்பாட்டில் வராது. பெருந்தானியத்தை சிறுதானியம் என பித்தலாட்டம் செய்வது கண்டனத்துக்குரியதே.
ஹார்லிக்ஸ் விவகாரம் காரணமாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே போர்ன்விட்டா விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதத்தில் 1948ம் ஆண்டு போர்ன்விட்டா ஊட்டச்சத்து பானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை காட்பரிஸ் நிறுவனம்தான் தயாரித்து வந்தது. இந்த நிறுவனத்தை 2010ல் அமெரிக்காவைச் சேர்ந்த மாண்டலெஸ் இன்டர்நேஷ்னல் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தள பிரமுகர் ரேவந்த் ஹிமந்த் சின்ஹா ஒரு பதிவிட்டார். போர்ன்விட்டாவில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புற்றுநோயை உருவாக்கும் பொருட்கள் உள்ளீடுகளாக உள்ளன என அவர் விமர்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் பெரும்பாலான பொதுநல ஆர்வலர்கள் போர்ன்விட்டா விளம்பரம் முழு உண்மையை பிரதிபளிக்கவில்லை என்றே கருத்து தெரிவித்துள்ளனர். சட்டரீதியில் வழக்கை எதிர்கொள்ள பொருளாதார வசதி இல்லாததால் தனது பதிவை நீக்குவதாக ரேவந்த் ஹிமந்த் சின்ஹா அறிவித்தார். பதிவு நீக்கப்படுவதற்கு முன் இதை ஒரு கோடியே ௨௦ லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு நூறு கிராமுக்கு 37.4 கிராமாக உள்ளது. இது அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட 15 சதவீதம் அதிகமாகும். போர்ன்விட்டா ஆரோக்கிய பானம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கத்தக்க ஆய்வுகளும் தரவுகளும் இல்லை. இதையடுத்து போர்ன்விட்டா ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கும் சந்தைப்படுத்தும் நிறுவனத்துக்கும் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.
உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உள்ளீடுகளைக் கொண்ட பானத்தை ஹெல்த் ட்ரிங்க் என்ற பெயரில் விளம்பரப்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ள கருத்து உதாசீனப்படுத்தத் தக்கதல்ல.