தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், ஆயுதச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆயுதங்கள் சட்டத் திருத்த மசோதாவில் மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.
ஆயுதங்கள் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை 14 ஆண்டுகளாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டத் திருத்த மசோதாவில் குறைந்தபட்ச தண்டனை 14 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை வாழ்நாள் ஆயுளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு துப்பாக்கிகளுக்கு அதிகமாக வைத்திருப்பவா்கள், கூடுதல் துப்பாக்கியை சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதிலிருந்து 90 நாள்களுக்குள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.