சென்னை நுங்கம்பாக்கம் பொன்னங்கிபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின்கீழ் இருக்கும் இக்கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுமார் ஆயிரம்ஆண்டுகள் பழமையான இக்கோயிலுக்கு 1933-ம் ஆண்டுஅக்டோபர் 30-ம்தேதி காஞ்சி சங்கர மடத்தில் இருந்து காஞ்சி பெரியவர் வருகை தந்து முருகனை வழிபட்டதோடு, கோயிலில் மண்டபம், சுற்றுமதில் கட்டி விரிவாக்கம் செய்வதற்காக ரூ.1000-ம் வழங்கி சென்றுள்ளார்.
இக்கோயிலில் வரசித்தி விநாயகர், அகத்தியர், ஆஞ்சநேயர், சாய்பாபா சந்நிதிகளும் உள்ளன. மேலும், இக்கோயிலுக்கு வரும்பக்தர்கள் முருகனை வழிபட்டால்,நினைத்த காரியம் நிறைவேறும்என நம்பிக்கை. அதுமட்டுமில்லாமல், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீப மஹோத்சவம் வெகு விமரிசையாக இக்கோயிலில் நடைபெற்று வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாக இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக இக்கோயிலில் கொடிமரம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இக்கோயிலில் புதிதாக கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 27 கலசங்கள் வைத்து 3 நாட்கள் கலச பூஜையும் நடைபெற்றது. இந்நிலையில், கும்பாபிஷேக நாளான நேற்று கலச பூஜை, சிறப்பு யாகம், கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோயில் குருக்கள் கலசநீரை கொடி மரத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் செய்விக்க, கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் ‘அரோகரா’கோஷமிட்டனர். இதை தொடர்ந்துகொடி மரத்துக்கு சிறப்பு பூஜைசெய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது.
பின்னர், வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டுசுவாமி தரிசனம் செய்தனர்.