மக்களால் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், தனது படங்களில் ஜாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். தன்னலம் கருதாது. பணியாற்றும் மக்கள் தொண்டர்களுக்கு உரிய கௌரவம் அளிப்பவர். ‘பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்’ எனும் விவேகானந்தரின் கருத்துக்கு ஏற்ப, ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவின் அவசியத்தை உணர்ந்து, காமராஜரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவாக்கினார். இதுபோன்ற எண்ணற்ற பல நல்ல விஷயங்களை செய்தவர் எம்.ஜி.ஆர்.
மூட திராவிட கொள்கைகள், சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியல் போன்ற பல தடங்கல்களை மீறி ஆன்மீக அரசியலை அன்றே முன்னெடுத்தவர் எம்.ஜி.ஆர். நான் மூகாம்பிகை பக்தன் என வெளிப்படையாகக் கூறினார். கொல்லூர் மூகாம்பிகையின் கையில் உள்ள தங்கத்தால் ஆன வீரவாள், எம்.ஜி.ஆரால் அளிக்கப்பட்டது. மீனாட்சிபுர மதமாற்றத்தை குறித்து பேசும்போது ‘இது அரபு நாட்டுப் பணம் செய்த வேலை’ என்று உண்மையை சொன்னவர் எம்.ஜி.ஆர்.
கிருபானந்த வாரியார் நெய்வேலி சொற்பொழிவில் ‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கு போனாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்’ என்று பேசியதாக கூறப்பட்டது. அண்ணாவை அவர் இழிவுபடுத்திவிட்டதாக கருதி தி.மு.கவினர் கிருபானந்த வாரியாரை தாக்கினர். எம்.ஜி.ஆர் வாரியாரிடம் பேசினார். தம் சொந்தச் செலவில் ஆன்மீக கூட்டம் நடத்தி அதில், கிருபானந்த வாரியாரை பேச வைத்தார். அப்போதுதான் ‘பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தார் கிருபானந்த வாரியார்.
காஞ்சி மகா பெரியவர் பாரதம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, காஞ்சி மடத்துக்கு திரும்பியபோது, தமிழக எல்லையில் தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆரால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சி மடம் நடத்திய ஹிந்து பண்பாட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.
எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று.