எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாட புத்தகத்தில் குடிமையியல் பிரிவில் அலகு-1இல் சமய சார்பின்மையை புரிந்து கொள்ளுதல் எனும் தலைப்பிலான பாடத்தில் ஆத்திகம் குறித்து தவறான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆத்திகம் என்றால் கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து தவறானதாகும். அதாவது ஆத்திகம் என்றால் கடவுளை நம்புவது ஆகும்.
ஆனால் 8-ம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆத்திகம் என்றால் கடவுள் நம்பிக்கையற்றிருத்தல் என்று தவறாக அச்சாகியுள்ளது. இதைப் படித்து பார்த்த பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பாட புத்தகம் எழுதி முடித்த பிறகு அச்சாவதற்கு முன்னதாக அதில் உள்ள பிழைகள், தவறுகளை அதற்குரிய அதிகாரிகள் பார்த்து திருத்த வேண்டியது அவசியமாகும். ஆனால் பிழைகள், தவறுகளுடனேயே பாட புத்தகங்கள் அச்சாகி மாணவர்களுக்கு வழங்கப்படுவது மாணவர்களை தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கும் என்பது உறுதி.