ஆதாரமின்றி பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம் என ஆர்.எஸ்.எஸ்., மாநில ஊடகத்துறை செயலாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நரசிம்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் பற்றி ஏராளமான வதந்திகளையும் அவதூறுகளையும் சமூக விரோதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சங்கம் இது போன்ற அவதூறுகளுக்கு பதிலளிப்பது இல்லை என்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, ஆதாரமற்ற ஒரு அவதூறைப் பரப்பியுள்ளார். புதுடில்லியில் 3.5 லட்சம் சதுர அடியில் ரூ.4500 கோடி செலவில் சங்கத்தின் பிரமாண்ட அலுவலகம் கட்டப்படுவதாக பொய்யான பிரசாரத்தை வாசுகி ஆரம்பித்துள்ளார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் இந்த பொய்க் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்ட அவதூறைப் பரப்பும் வாசுகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.