தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. பேரரசர் ராஜராஜ சோழன் ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது? என்பதை காண, ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடத்தில் கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார்.
அவர் அரசர் என்று யாருக்கும் தெரியாது. ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலரும் ஒன்று சேர்ந்து இழுத்தும் பாறை நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள்.
அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்றார் கோபத்துடன். அவனருகில் போன அரசர், “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து பாறையைத் தூக்க முயற்சிக்கக் கூடாதா?” என்று கேட்டார்.
“நான் மேற்பார்வையாளன் என்பது தெரியவில்லையா?” என்றான் ஆணவத்துடன் அவன். அப்படியா? என்ற ராஜராஜசோழன் வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சித்தார். ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது.
பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் பேரரசரிடமிருந்து மேற்பார்வை யாளருக்கு ஒரு ஓலை வந்தது. அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லவும்.
நேற்று வேலை செய்ததைப் போல் அவர் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது. இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு ஆணவம் ஒழிந்தது. பின் அவனும் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான்.