தி.க., தி.மு.க., ம.தி.மு.க., பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் அனைத்தும் ஜஸ்டிஸ் கட்சியை தங்களது தாய் கட்சி என்று பெருமையுடன் கூறி வருகின்றன. ஜஸ்டிஸ் கட்சியின் வரலாற்றை சுருக்கமாய் பார்ப்போம்.
நம் நாட்டைக் கைப்பற்றிய பிறகு, மக்களிடையே பிரிவுகளை உண்டாக்கி அவர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் படியாகச் செய்து, அவர்களைப் பலவீனப்படுத்தி அதன் மூலம் தங்களது ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்தார்கள்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவுகளை உண்டாக்கினர். தேசத்தின் விடுதலைக்காக காங்கிரஸ் போராடிக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்களுக்கென ‘முஸ்லிம் லீக்’ எனும் இயக்கத்தை உருவாக்க ஆங்கிலேயர்களே காரணமாக இருந்தனர்.
நாட்டின் வட பகுதியில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என எப்படி பிளவை உண்டாக்கினார்களோ அதேபோன்று, தென்பகுதியில் பிராமணர் – பிராமணரல்லாதார் என்று பிளவை உண்டாக்கினார்கள்.
1916ம் ஆண்டில் பிராமணரல்லாதவர்களுக்காக ‘தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம்’ என்ற கட்சி ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கட்சியை திட்டமிட்டு துவக்கியது ஆங்கிலேய வைசிராயும் சென்னை மாகாண கவர்னரும் தான். இந்தக் கட்சியின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகையும் ‘திராவிடன்’ என்று ஓர் தமிழ் இதழும் தொடங்கப்பட்டது. நாளடைவில் அந்தக் கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்றே அழைக்கப்பட்டது.
சர். பி. தியாகராஜ செட்டியார் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரானார். ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளும் வேலைத் திட்டங்களும் பிராமண ஆதிக்கத்திற்கு எதிரானவை என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவாகவே அது செயல்பட்டது. 1916 முதல் 1947 வரை ஜஸ்டிஸ் கட்சி இந்திய விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தே வந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கக்கூடாது என்றும் பிரச்சாரம் செய்தது.
அன்றைய சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1934 வரை ஜஸ்டிஸ் கட்சி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
பிராமணர் அல்லாதவர்களின் நலன் என்றவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் அமைச்சரவையில் ஹரிஜன சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட இடம் கொடுக்கவில்லை.
இவர்களின் யோக்கியதைக்கு மேலும் ஒரு சான்று, தங்களின் ஆங்கிலேய எஜமானர்களின் ஆணைப்படி பாரதியாரின் தேசபக்திப் பாடல்களைத் தடை செய்தார்கள்!
1936-ம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அத்துடன் அதன் வாழ்வு முடிந்தது.