ஆங்கிலமும் ஆடம்பரமும் தேவையில்லையே!

அன்புடையீர் வணக்கம்.

எனக்கு அறிமுகமான ஒரு இளைஞர் தனது திருமணத்திற்கான அழைப்பிதழை நேரில் கொண்டுவந்து கொடுத்தார். அந்த இளைஞர் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அழைப்பிதழ் ஆடம்பரமாக விலை உயர்ந்த காகிதத்தில் பளபளவென்று அச்சிடப்பட்டிருந்தது. இந்த ஆடம்பரம் எல்லாம் தேவைதானா என்ற சிந்தனையோடு கவரை பிரித்துப்பார்த்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.

திருமண அழைப்பிதழில் மணமகன், மணமகள் பெற்றோர் பெயர்கள் அச்சிடப்படவில்லை. எனது திருமணத்திற்கு வாருங்கள் என்று மணமகனே அழைப்பதாகத்தான் அழைப்பிதழ் இருந்தது. ஒருவர் தனது திருமணத்திற்குத் தாமே அழைப்பு விடுப்பது நமது பண்பாடு இல்லை. அழைப்பிதழில் மற்றொரு நெருடல். அது ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. அந்த இளைஞரின் உறவினர்கள் நண்பர்கள் அனைவருமே தமிழர்கள் என்றிருக்கும்போது ஆங்கிலம் எதற்கு? திருமண வரவேற்பில் மணமகன் கோட்டும் சூட்டும் டையும் ஷூவும் அணிந்திருப்பது தேவைதானா? திருமணத்தில் ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரி என்ற கூத்துக்கள் தேவைதானா?திருமணங்கள் நமது பாரம்பரிய வழக்கப்படி எளிமையாக நடப்பது நல்லது, சிறந்தது.