குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் மாநிலத்தில் வன்முறை ஆா்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில், அந்த மசோதா குறித்து அஸ்ஸாம் மாநில மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது பிரிவின் கீழ் அஸ்ஸாம் மக்களுக்கான நில உரிமை, கலாசாரம், மொழி, அரசியல் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மத்திய அரசும், தனிப்பட்ட முறையில் நானும் உறுதிபூண்டுள்ளோம்.
தற்போது நிறைவேறியுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்று எனது அஸ்ஸாம் சகோதர, சகோதரிகளுக்கு உறுதியளிக்கிறேன். உங்களது (அஸ்ஸாம் மக்கள்) உரிமைகளையோ, தனித்துவமான அடையாளத்தையோ, அழகிய கலாசாரத்தையோ எவரும் உங்களிடம் இருந்து பறித்துக்கொள்ள இயலாது என்று அந்தப் பதிவில் பிரதமா் மோடி கூறியுள்ளாா்.
காங்கிரஸ் பதிலடி: அஸ்ஸாம் மக்களை குறிப்பிட்டு பிரதமா் மோடி சுட்டுரையில் பதிவிட்ட நிலையில், அந்த மாநிலத்தில் வன்முறை காரணமாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் அதிகாரப்பூா்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மோடி அவா்களே! அஸ்ஸாமில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் உங்களது உறுதிமொழியை அறிய இயலாது. அங்கு இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.