அவசரகதியில் மசோதாக்கள் நிறைவேற்றம் எனப் புகார் – எதிர்க்கட்சிகளின் கடிதத்தை நிராகரித்தார் வெங்கய்ய நாயுடு

நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்கள் முறையான விவாதம், ஆய்வு இன்றி அவசரகதியில் நிறைவேற்றப்படுவதாக காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அளித்த கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை நிராகரித்தார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்கள், நாடாளுமன்ற தேர்வுக் குழு மற்றும் நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்படாமல் நேரடியாக நிறைவேற்றப்படுகின்றன; நாடாளுமன்றத்தின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு மீறுகிறது; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகள் ஏற்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டியதுடன், இந்த விவகாரத்தில் உடனடியாக மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவரும் தலையிட வேண்டும் என்று வெங்கய்ய நாயுடுவுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன்சமாஜ், தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள், தலைவர்கள் கடிதம் எழுதினர்.

பின்னர் கேள்வி நேரத்தின்போது அக்கடிதம் குறித்து பேசிய வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் அவசரகதியில் நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டவை. அதனால் இந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. தவறான நபரிடம் புகார் தெரிவித்துள்ளீர்கள்.

எதிர்க்கட்சியினரின் கருத்துகளுக்கு இடமளிக்கவில்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஒரு கூட்டத்தொடரில் குறைந்தபட்சம் 3 குறுகிய கால விவாதம் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. மாநிலங்களவையில் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் 3-க்கும் மேற்பட்ட குறுகிய கால விவாதங்கள் நடைபெற்றுள்ளன. நடப்பு கூட்டத்தொடரில் 2 குறுகிய கால விவாதங்கள் முடிவடைந்துள்ளன. 3-ஆவது விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள்தான் ஒத்துழைக்கவில்லை.

இத்தகைய ஆதாரங்களால், நாடாளுமன்றத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் விதிமுறைகள் மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது என்று கூறினார்.

நாடாளுமன்றத்தின் அடிப்படை உரிமைகளை தகர்க்கும் நடைமுறைகளுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன் என்று உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன் என்று கூறி எதிர்க்கட்சிகள் அளித்த கடிதத்தை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.