ஒரு பெண் நிருபர் தமிழகத்தின் முக்கியமான அமைச்சரைக் கேள்வி கேட்கிறார், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?” என்று. அதற்கு அந்தப் பொறுப்பான மந்திரி சொல்லும் பதில், நீங்கள் போட்டிருக்கும் மூக்குக் கண்ணாடியினால் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க!” என்று.
ஒரு பெண்ணைப் பார்த்து, நீங்கள் அழகா இருக்கீங்க!” என்று சொல்லிவிட்டால் அவள் அகமகிழ்ந்து போய்விடுவாள் என்ற சைக்காலஜியோ?
கர்நாடகாவில் பெண்கள் தினவிழாவில், டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமான முறையில் இறந்துபோன நிர்பயாவின் தாயாரை அழைத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற டி.ஜி.பி., நிர்பயாவின் தாயாரே இத்தனை கட்டுக்கோப்பான உடலுடன் இருக்கிறார் என்றால், நிர்பயா எப்படி இருந்திருப்பார்? என்று பேசியிருக்கிறார்.
நீங்கள் அழகா இருக்கீங்க!” என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று பேசுபவர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்த வார்த்தைகளை யார் யாரிடம், எந்தத் தருணத்தில் சொல்லலாம் என்பது இருக்கிறது. எல்லோரும், எல்லா சமயங்களிலும், யாரிடம் வேண்டுமானாலும் சொல்ல முடியாது. தமிழ், தமிழ்ப்பண்பாடு என்பதையெல்லாம் பேசுகிறவர்கள் அதைக் கட்டிக் காக்கிறார்களா என்பதுதான் கேள்வி.
இன்னமும் பெண்ணை வீழ்த்துவதற்கு இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது நிரூபணமாகிறது. ஒரு பெண் தன் கடமையில் ஈடுபட்டிருக்கும்போது, அவருக்குப் பதில் சொல்ல விமர்சிக்கப்படுகிறார். இன்னொருவர் பெண்கள் தினத்தன்று மரியாதை செய்வதற்காக அழைக்கப்பட்டு இப்படி ‘மரியாதை’ செய்கிறார்!
மத்திய அமைச்சரவையில் ராணுவத்துறை அமைச்சராகவே ஒரு பெண், அதுவும் நமது தமிழ்ப்பெண் இருக்கிறார். இன்னும் பொறுப்பான பதவிகளில், கடும் உழைப்புடன் பெண்கள் மிளிர்கிறார்கள். ஆனாலும் அவர்கள் எவ்வளவு உழைப்பாளிகளோ, மதிக்கத்தக்கவர்களோ – பெண் எனும் நிலைப்பாடே இங்கே முதலில் விமர்சனத்திற்கு உள்ளாகிறது!
பெண் என்பதிலிருந்து பெண்ணுக்கு எப்போது விடுதலை!
(கட்டுரையாசிரியர் ‘இந்த மாத சிநேகிதி’ ஆசிரியர்)