அர்ப்பணிப்பே அவர் வாழ்க்கை

ரண்டு பிறந்தநாள் விழா மேடைக் காட்சிகள். ஒன்று பாரதத் தலைநகர் டெல்லியில். மேடையில் ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தன் அருகே அமர்ந்திருக்கும் பிறந்தநாள் விழா நாயகன் அசோக் சிங்கலிடம் சங்கப்பாட்டு ஒன்று பாடுமாறு பணிக்கிறார். அமர்ந்தபடி அசோக் சிங்கலும் ‘இந்த புண்ணிய நாடெங்கள் நாடு’ என்ற பொருள் தரும் தேசபக்திப் பாடலை கணீர் குரலில் 80 தாண்டிய வயதிலும் முழங்கிப் பாடுகிறார். அடுத்தது சென்னையில் அசோக் சிங்கலின் பிறந்தநாள் விழா மேடை. இடம் காமராஜர் அரங்கம். அசோக் சிங்கலை வாழ்த்திப் பேசியவர்கள், நீங்கள் 100 ஆண்டு வாழணும், 120 ஆண்டு வாழணும் என்று இலக்கியமாக பொழிந்தார்கள். ஏற்புரை நிகழ்த்திய அசோக் சிங்கல் ‘ராமபிரான் பரிதாபமாக ஒரு கூடாரத்தில் ஒண்டிக்கொண்டிருக்கிறார். காசியிலும் மதுராவிலும் அவமானச் சின்னங்களின் நிழலில் விஸ்வநாதரும் ஸ்ரீ கிருஷ்ணரும் கோயில் கொண்டிருக்கிறார்கள். ஊரில் மற்றவர்களுக்கு கிடைக்கிற மரியாதை ஹிந்துக்களுக்கு கிடைப்பதில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் 100,120 ஆண்டுகள் வாழ வேண்டும் என்கிறீர்களா?’ என்று உணர்ச்சி ததும்ப கேள்வி எழுப்பினார்.

AHOCK-SINGAL

 

அண்மையில் உடல் நலமின்றி டெல்லி மருத்துவமனையில் அவர் காலமான போதும் அவர் மனதில் இந்த தாபங்கள் குறையாமல் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அசோக் சிங்கல் ஒரு நல்ல ஸ்வயம்சேவகர் என்பது முதல் பத்தியில் கூறப்பட்டுள்ள மேடைக்காட்சி காட்டுகிறது. சர்சங்கசாலக்கின் விருப்பத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார் ஸ்வயம்சேவகர் அசோக் சிங்கல். அசோக் சிங்கல் ஒரு நல்ல ஹிந்து என்பது சென்னை விழா மேடையில் அவர் மனம் திறந்து கொட்டிய உணர்ச்சிகளிலிருந்து தெரிகிறது.

அவர் 1926 செப்டம்பர் 27 அன்று ஆக்ராவில் பிறந்தார். 1942ல் ரஜ்ஜுபையா என்று அன்புடன் அழைக்கப்படும் பேராசிரியர் ராஜேந்திர சிங் அவரை ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு அறிமுகப்படுத்தினார். காசி ஹிந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்த தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றபின், அசோக் சிங்கல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரகராகி ஹிந்து ஒருங்கிணைப்புப் பணியில் முழுநேரமாக ஈடுபட்டார். டெல்லி – ஹரியானா பகுதி மாநில அமைப்பாளராக செயல்பட்டார். 1948ல் சங்கத்தின் மீது அநியாயமாக தடை வந்தபோது சத்யாகிரகம் செய்து சிறை சென்றார் அசோக் சிங்கல். இந்திரா காந்தி 1975ல் சுயநல நோக்குடன் ஆர்.எஸ்.எஸ்ஸை தடைசெய்த போதும், அசோக் சிங்கல் இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, வெகுஜனங்களை கிளர்ந்தெழத் தூண்டி வந்தார்.

அயோத்தி

பின்னர் சங்க தீர்மானப்படி அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பை ஏற்றார். விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு சமய விழிப்புணர்வு, சேவை, சம்ஸ்கிருதம், மதமாற்ற எதிர்ப்பு, பசுப்பாதுகாப்பு என பல முனைகளில் பணிகள் வந்து சேர்ந்த போதிலும் ராமபிரான் அவதரித்த அயோத்தியில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற இலக்குடன் உருவான ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு அசோக் சிங்கலின் தலைமை உயிரும் ஊட்டமும் அளித்தது.

மீனாட்சிபுரம்

விஸ்வ ஹிந்து பரிஷத் பணி தொடர்பாக ஏராளமான நாடுகளுக்கு அவர் விஜயம் செய்திருந்தாலும் 1980களில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரத்தில் ஹரிஜனங்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்படும் சர்வதேச சதி அவர் கண்ணில் படத் தவறவில்லை. எஞ்சியுள்ள ஹரிஜனங்களின் சமய உணர்விற்கு உதவிகரமாக, மதமாற்றத்திற்கு இலக்கான ஊர்களில் ஏராளமான ஹிந்துக் கோயில்களைக் கட்டுவதற்கு அசோக் சிங்கல் உறுதுணை புரிந்தார். அதனால் அனைத்து ஹரிஜன குடும்பங்களிலும் ஒரு தன்னம்பிக்கை பிறந்தது. வாழ்நாளெல்லாம் அசோக் சிங்கல் ஒரு தவம் போல எல்லா சம்பிரதாயங்களின் மடாதிபதிகளையும் துறவிகளையும் நாடு நெடுக சந்தித்து, ஒருங்கிணைத்து ஆன்றோர்களை ஹிந்து ஒருங்கிணைப்பிற்கு ஈட்டிமுனையாக உருவாக்கினார்.

அரசு

இவ்வாறு அவர் தொட்டதெல்லாம் துலங்கியது என்பதை பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், அவர் தனி மனிதரல்ல, ஒரு ஸ்தாபனம். ஹிந்து சமுதாயத்திற்கு தொண்டு புரிவதிலேயே அவரது வாழ்க்கை சமர்ப்பணமாயிற்று” என்று சுட்டிக் காட்டியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்

பழுத்த ஸ்வயம்சேவகரான அசோக் சிங்கலின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத், சர்கார்யவாஹ் சுரேஷ் ஜோஷி ஆகியோர் இவ்வாறு இரங்கல் தெரிவித்தார்கள்:

உலகம் முழுவதிலுமுள்ள ஹிந்து சமுதாயத்திற்கே அசோக் சிங்கலின் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழ்நாளெல்லாம் போராடியபடி வலம் வந்த அவரது வாழ்க்கை கடைசியில் மரணத்துடனும் நீண்ட நாள் போராடி நிறைவடைந்தது. அசோக் சிங்கல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரகராக இருந்தார். சங்கத்தின் திட்டப்படி அவருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஹிந்து சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் வாயிலாக அவர் அரும்பணி ஆற்றியுள்ளார். ராம ஜென்ம பூமி ஆலய இயக்கத்தை மிக முக்கியமான கட்டத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றினார். பாரதத்தின் எல்லா தலைசிறந்த துறவிகளிடமும் ஆன்றோர்களிடமும் பரிவுடன் தொடர்பு கொண்டு வந்தார். அதனால் அவர்கள் அனைவரின் நம்பிக்கையையும் மதிப்பையும் சம்பாதித்தார். அவரது உரைகளிலும் அறிக்கைகளிலும் வெளிப்படுவது ஹிந்துத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம் தான். இப்படிப்பட்ட வெற்றிகரமான இயக்க அமைப்பாளரும் தீவிரமான தளபதியுமான ஒருவரை இன்று ஹிந்து சமுதாயம் இழந்து நிற்கிறது. சில காலமாகவே தனது உடல்நலக் குறைவு காரணமாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொறுப்பை அவர் தகுதி வாய்ந்த கார்யகர்த்தர்களிடம் ஒப்படைத்துவிட்டு, புரவலர் என்ற ரீதியில் வழிகாட்டி வந்தார். சுதந்திர பாரதத்தில் ஹிந்து எழுச்சி வரலாறு எழுதப்படும்போது, அசோக் சிங்கலின் போராட்ட மயமான வெற்றிகரமான தலைமை நிச்சயம் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சத்கதி அடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.”        டூ

 

 

அர்ப்பணிப்பே அவர் வாழ்க்கை

* காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் அசோக் சிங்கல் பொறியியல் பட்டம் பெற்றார்.

* 1947ல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஆனார்.

* மீனாட்சிபுரத்தின் ஒட்டுமொத்த மதமாற்ற அபாயத்தை முறியடிக்க ஏராளமான ஹிந்து கோயில்களை எழுப்பச் செய்தார்.

* வாழ்நாளின் சிகரமான பணியாக ராம ஜென்ம பூமி பேரியக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்.