கர்நாடக மாநிலம் தங்கவயல் தாலுகாவுக்கு உட்பட்ட குட்டஹள்ளியில் பங்காரு திருப்பதி எனும் பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் உள்ளது. கர்நாடக ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் செயல் அதிகாரியான சுப்பிரமணியன் என்பவர், கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் லக்ஷ்மி நாராயணன் என்பவரை கழிவறையை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு கழிவறையை சுத்தம் செய்தால்தான், கோயிலில் இனி வேலை செய்ய முடியும் இல்லையெனில் வேலையும் கிடையாது சம்பளமும் கிடையாது என்று அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டு வருவதாக தாலுகா வர்த்தகர்கள் சங்கம் புகைப்பட ஆதாரத்துடன் கர்நாடக அரசுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளது. ‘இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்’ என்று ஹிந்து அறநிலையத்துறை ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளதாக அர்ச்சகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.