நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர் ஆவுடையக்கா. சிறுமியாக இருந்தபோது திருமணம் நடைபெற்றது. தாழம்பூ வைத்துப் பின்னிய சடையுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். தாழம்பூவில் பூவின் நிறத்திலேயே இருந்த சிறிய கொடிய பாம்பு இருந்தது. அது கணவரைத் தீண்டியதும் அவரது உயிர் பிரிந்தது. ஆவுடையக்கா கைம்பெண் ஆகிவிட்டாள். இதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் எல்லாம் இறைவன் செயல் என்று வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்ற ஆவுடையக்கா அங்கு ஒரு அரச மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து தவம் செய்த மகானைப் பார்த்து வணங்கினாள். அந்த மகான் ஸ்ரீதர அய்யாவாள். அவர் ஆவுடையக்காவிற்கு ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து தினசரி பூஜை செய்து வரும்படி அறிவுறுத்தினார். அதன் பிறகு ஆவுடையக்கா வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை எளிய தமிழில் பாடத் துவங்கினார்.
ஒரு முறை திருவனந்தபுரத்திற்குச் சென்ற ஆவுடையக்காவை திருவாங்கூர் மன்னர் வரவேற்று உபசரித்தார். ஆவுடையக்காவின் தினசரி பூஜைக்காக தங்கத்தாலான வில்வ இதழ்களை வழங்கினர். மற்ற மலர்களுடன் அரசர் கொடுத்த தங்க வில்வத்தையும் கொண்டு சிவ பூஜை செய்தார்.
அடுத்த நாள் முதல் நாள் அர்ச்சித்த மலர்களுடன் தங்க வில்வத்தையும் குளத்தில் போட்டுவிட்டார். பொன்னையும் மண்ணையும் ஒன்றாகக் கருதிய மனோபாவம் படைத்த ஆவுடையக்காவின் துறவுள்ளம் கண்டு மன்னர் பெரிதும் வியந்தார்.
ஒரு நாள் குற்றாலம் அருவியில் மலை மீது ஏறி தியானம் செய்து திரும்புவதாகக் கூறிச் சென்றார். ஆனால் ஆவுடையக்கா திரும்பிவரவேயில்லை.
மகாகவி பாரதியார், ஆவுடையக்காவின் பக்தர் என்று குறிப்பிடுகிறார்கள். அவரின் எளிய தமிழ் நடை பாரதியாருக்கு முன்னோடி. இவரின் நினைவாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஆவுடையப்பன், ஆவுடையம்மாள் என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பார்கள்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்!
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்!