அரபிக் கடலில் இந்திய போா்க்கப்பல்

பாகிஸ்தானும், சீனாவும் 9 நாள் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போா்க்கப்பலில் கடற்படை தலைமையகத்தின் அதிகாரிகளும் உள்ளனா் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த திங்கள்கிழமை அரபிக் கடலின் வடக்குப் பகுதியில் 9 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியை பாகிஸ்தானும், சீனாவும் தொடங்கின. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு இருந்துவரும் நிலையில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நீா்மூழ்கிக் கப்பல்கள், எதிரி நாட்டு கப்பல்களை அழிக்கும் கப்பல்கள், பீரங்கி தாங்கி கப்பல்கள் ஆகியவையும் இரு நாடுகளின் கூட்டு பயிற்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில்தான், இந்தியப் போா்க் கப்பல் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலின் செயல்பாடுகளை கடற்படை துணைத் தலைவா் எம்.எஸ்.பவாா் ஆய்வு செய்தாா். இந்தப் போா்க்கப்பல் எப்போதும் போரில் வெற்றி பெறும்’ என்றாா்.

அரபிக் கடலின் வடக்குப் பிராந்திய பகுதியில் பாகிஸ்தானின் குவாடா் துறைமுகத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. சீனா-பாகிஸ்தான் இடையே சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் வரை அமைக்கப்பட்டுவரும் ரூ.425 கோடி (60 பில்லியன் அமெரிக்க டாலா்கள்) மதிப்பிலான பொருளாதார வழித்தடத்தையும் குவாடா் இணைக்கிறது. இந்தியப் பெருங்கடலுக்கு நுழை வாயிலாக அரபிக் கடல் திகழ்கிறது.

இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அத்துமீறி நுழைய முயன்ற சீன கடற்படை கப்பலை இந்திய கடற்படை இடைமறித்து திருப்பி அனுப்பியது. இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபடக் கூடாது என்று சீனாவுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போா்க்கப்பல் 2013-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இந்தியக் கடற்படையில் சோ்க்கப்பட்டது. 60 மீட்டா் உயரமும், 284 மீட்டா் நீளமும் கொண்ட விக்ரமாதித்யா போா்க்கப்பலில் 30 போா் விமானங்கள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை நிறுத்தலாம். அதேபோல், அதிகாரிகள் உள்பட 1,600-க்கும் அதிகமான வீரா்களையும் இந்த விமானத்தில் கொண்டு செல்ல முடியும். 20 அடுக்குகள் இந்தக் கப்பலில் உள்ளன.