சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் ஆங்கில மருத்துவ (அலோபதி மருத்துவம்) சிகிச்சைக்கு சென்றுள்ளார். பரிசோதனையில் அவருக்கு பித்தப்பையில் 33 மிமீ அளவுக்கு கல் இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், அவர் அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை பெறாமல், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு வந்தார்.
அவருக்கு, ஆலிவ் ஆயில் தெரபிசிகிச்சை அளிக்கப்பட்டு, உணவு கட்டுபாடு முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து இரண்டுநாள் அவருக்கு பேதியானது. அதில்,பித்தப்பையில் இருந்த கல், அவரது மல கழிவு மூலமாக வெளியேறியது. மண் குளியல், வாழையிலை குளியல், அக்குபஞ்சர் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இயற்கை உணவுகள் மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டது.
இந்த சிகிச்சை முறையின் பயனாக, 15 நாட்களில் அவரது பித்தப்பை கல்லின் அளவு, 33 மிமீ-ல் இருந்து 7.3 மிமீ அளவுக்கு குறைந்தது. தற்போது, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் இல்லாமல் அவர் நலமுடன் உள்ளார். பித்தப்பை கல் ஏற்படுவதற்கு, உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்கள் ஆகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில், மருந்தில்லாமல் இயற்கையாகவே இலவசமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தி வருகிறோம் என மருத்துவர்கள் கூறினர்.