திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க போகிறார் கோவிந்தராஜ். அங்கு அவர் பார்த்த காட்சி மனதை நெருடுகிறது.
மருத்துவமனை வாசலில் மக்கள் கூட்டம், உண்ண உணவு இல்லாத சூழ்நிலை. குடிக்க குடிநீரும் இல்லை. உள்நோயாளிகளுக்கு குறிப்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சுத்தம் செய்ய வெந்நீர் இல்லை.
உடனே கோவிந்தராஜ் தன் வீட்டிற்குச் சென்று சுடுநீர் தயார்செய்து நோயாளிகள் அனைவருக்கும் விநியோகம் செய்தார்.
மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. இவரைக் கையெடுத்து கும்பிட்டு ‘நல்லாயிருக்கணும்’ என்று வாழ்த்தினார்கள். இந்த வாழ்த்து அவருக்கு புதிய அனுபவமாக இருந்தது. மனதில் ஒரு நிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. வீட்டிற்கு வந்து மனைவியிடம் கூறி, தன் வீட்டில் கஞ்சி வைத்து கொண்டுபோய் மருத்துவமனை நோயாளிகளுக்கும் அவர்களை கவனித்துக் கொள்ளும் உதவியாளர்களுக்கும் கொடுத்தார் இந்த சாதாரண விவசாயி.
அன்று துவங்கிய இந்த அன்னதானப் பணியை தொடர்ந்து 26 ஆண்டுகளாக செய்து வருகிறார் கோவிந்தராஜ். இந்தப்பணியை இப்போது தொடர்ந்து செய்து வருகிறார் அவரது மகன் அகஸ்தியரும் மனைவியும். இந்தப் பணியில் அவரது மருமகனும் உதவியாக உள்ளார். தற்போது இந்தப் பணியை தொடர்ந்து செய்ய ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார்கள். ஆனாலும் இந்தக் குடும்பத்தினர் தினசரி நேரடியாக சென்று தொண்டாற்றுகிறார்கள். காலையில் சுடுகஞ்சியும் வெந்நீரும் கொடுக்கிறார்கள். மதியம் 11 மணிக்கு வேன் மூலம் உணவு சுமார் 400 பேருக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அகஸ்தியரிடம் கேட்டபோது, என் அப்பா துவங்கிய இந்தப் பணியை இறையருளால் நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். இதற்கு என் மனைவியின் முழு ஒத்துழைப்பு கைகொடுக்கிறது. ஊதியமே இல்லாமல் தொடர்ந்து சேவை செய்யும் 30 தன்னார்வத் தொண்டர்களும் இந்த அன்னதானப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சில நாட்களுக்கு கைப்பணம் போட்டு செய்கிறோம். மற்ற நாட்களுக்கு சில அன்பர்கள் கொடுப்பதை வைத்து செய்கிறோம்” என்கிறார் சிறிதும் கர்வம் இல்லாமல். பரம்பரை சொத்தை காப்பாற்ற முயலும் இந்தக் காலத்தில் அன்னதானத்தை பரம்பரைத் தொண்டாக்க முயலும் இவர்களுக்கு இறைவன் அருள்புரிவாராக!
(சமீபத்தில் தூர்தர்ஷனில் சனிக்கிழமைதோறும் 6 மணிக்கு வரும் ‘அன்புடன் DD’ நிகழ்ச்சியில் வந்த நிகழ்வு).