உத்தர பிரதேசம் அயோத்தியில் பால ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பால ராமர் சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கிறது. ஜனவரி 22-ம் தேதி கோயில் திறக்கப்பட்டது.
ஜனவரி 23-ம் தேதி முதல் பக்தர்கள் பால ராமரை வழிபட்டு வருகின்றனர். நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தருகின்றனர். கடந்த 1-ம் தேதி நிலவரப்படி 25 லட்சம் பக்தர்கள் பால ராமரை வழிபட்டு உள்ளனர். கோயில் கருவறை பகுதியில் 4 காணிக்கை பெட்டிகள் வைக்கப் பட்டு உள்ளன. கடந்த 11 நாட்களில் இந்த பெட்டிகளில் பக்தர்கள் ரூ.8 கோடிக்கும் அதிக மாக காணிக்கை செலுத்தி உள்ளனர்.
ஆன்லைன், காசோலை வாயிலாக பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 10 கணினி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த கவுன்ட்டர்கள் வாயிலாக பக்தர்கள் ரூ.3.5 கோடிக்கும் அதிகமாக காணிக்கை செலுத்தி உள்ளனர். இதுதொடர்பாக பால ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது:
கடந்த 11 நாட்களில் அயோத்தி பால ராமர் கோயிலில் பக்தர்கள் ரொக்கமாகவும், ஆன்லைன், காசோலை வாயிலாகவும் ரூ.11.5 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 11 வங்கி ஊழியர்கள் உட்பட 14 பேர் அடங்கிய குழு காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளது. காணிக்கை செலுத்தும் இடம், காணிக்கை எண்ணும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அயோத்தியில் உறைய வைக்கும் குளிர் நிலவும்போதிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். இவ்வாறு பிரகாஷ் குப்தா தெரிவித்தார்.
பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக டெல்லி, மும்பை,சென்னை, பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், அகமதாபாத், தர்பங்கா உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கடைபிடிக்கும் நடைமுறைகளை அயோத்தி பால ராமர் கோயிலிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனிடையே பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அயோத்தியில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 2 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்களுக்கு குடியிருப்புகளை கட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.