அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில் சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் உத்தர பிரதேச மாநில அரசு என்றும் அதே தீர்ப்பில் சொல்லி இருந்தனர்.
ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது. அதன்படி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்க ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு முதன் முதலாக மத்திய அரசு ரூ.1 நன்கொடை அளித்துள்ளது.
‘உள்துறை அமைச்சகத்தின் செயலாளரான டி முர்மு இன்று மத்திய அரசின் சார்பாக ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் நன்கொடை அளித்தார். எந்தவொரு நபரிடமிருந்தும் நன்கொடைகள், மானியங்கள், சந்தாக்கள், உதவிகள் அல்லது பங்களிப்பு மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவற்றை எந்தவொரு நிபந்தனையும் இன்றி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும்’ என துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.