”பாகிஸ்தான் மட்டுமின்றி, அமெரிக்காவும் மதச்சார்பு நாடு தான். இந்தியா மட்டுமே, உண்மையான மதச்சார்பின்மை நாடு,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டில்லியில் நடக்கும், என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையின், குடியரசு தின விழா பயிற்சி முகாமை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பார்வையிட்டார்.
பிரகடனப்படுத்தவில்லை
அப்போது,பாரத நாட்டைச் சேர்ந்த நாம், மதங்களுக்கு இடையே, எந்த பாகுபாட்டையும் பார்த்தது இல்லை; வேறுபாட்டுடனும் நடத்தியதில்லை; நடத்தவும் மாட்டோம். நம் அண்டை நாடு, தங்கள் அரசுக்கு மதம் உள்ளது என, அறிவித்து உள்ளது. தங்களை மதச்சார்புள்ள நாடு என, பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், நாம் அவ்வாறு பிரகடனப்படுத்தவில்லை.
அமெரிக்கா கூட, மதச்சார்புள்ள நாடு தான். ஆனால், இந்தியா ஒருபோதும் மதச்சார்புள்ள நாடாக இருந்தது இல்லை. ஏனென்றால், நம் சாதுக்கள், துறவிகள் அனைவரும், நம் நாட்டு எல்லைக்குள் வாழ்பவர்களை மட்டும், நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக நினைக்கவில்லை. உலக மக்கள் அனைவரையும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதினர்.
சர்வதர்ம சமத்துவம்
இந்த நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். அதனால், நம் துறவிகள், உலகத்தையே ஒரு குடும்பமாக கருதும் நோக்கில், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கோஷத்தை, நமக்கு சொல்லிக் கொடுத்துள்ளனர். சர்வதர்ம சமத்துவம் என்பது, பாரத நாட்டிலிருந்து தான், மற்ற நாடுகளுக்கு சென்றுள்ளது.நானும், மாணவனாக இருந்த போது, என்.சி.சி.,யில் இருந்தேன் என்பதை, பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
அவர்களும் நம் நாட்டினர் தான்
‘ஜம்மு – காஷ்மீரில், சிறுவர்களிடம் பயங்கரவாத கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இது மிகவும் கவலையளிக்கிறது’ என,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,சமீபத்தில் தெரிவித்தார்.இது பற்றி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,
ஜம்மு – காஷ்மீரில் உள்ள சிறுவர்களும் நம் நாட்டினர் தான். அவர்களை சிலர் தவறான பாதையில் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இதற்காக, சிறுவர்களை விமர்சிக்க கூடாது. தவறான பாதையில் திசை திருப்ப முயற்சிப்பவர்கள் மீது தான், நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைப் பிரச்னைகளை பாதுகாப்பு படையினர் கவனித்து கொள்வர். இந்தியாவை எதிர்க்க, எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.