அமரர் மா.கோ. வைத்யா பன்முக திறன்கள் பாரதப் பணிக்கே

ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த ஸ்வயம்சேவகர், சங்கத்தில் அகில பாரத பௌதிக் பிரமுக், அகில பாரத பிரச்சார் பிரமுக், அகில பாரத செய்தித் தொடர்பாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து வழிகாட்டி வந்த. மாதவ் கோவிந்த் வைத்ய டிசம்பர் 20 அன்று நாகபுரியில் காலமானார். அன்னாருக்கு வயது 97. அந்த ஸ்வயம் சேவகர் 90 ஆண்டுகள் சங்கத்தின் வளர்ச்சிக்காகவே கடைசி காலம் வரை வாழ்ந்தார், சங்கம் கொடுத்த பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடித்தார்.
அவர் தனது 97 வருட வாழ்நாளில் சங்கத்தின் 6 சர்சங்கசாலகர்களுடனும் இணைந்து சங்கப் பணியாற்றும் பேறு பெற்றவர். சங்கத்தின் வளர்ச்சிக்கு அரிய பங்களிப்பினை வழங்கிய மா.கோ.வைத்ய மறைவுக்கு தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலதரப்பட்ட பெருமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது பங்களிப்பினை நினைவு கூர்ந்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்.சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத், சர்கார்யவாஹ் பையாஜி ஜோஷி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள், நாகபுரி பத்திரிக்கையாளர் சங்கப் பிரதிநிதிகள் பலர் மா.கோ.வைத்ய மறைவுக்கு  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
‘லக்ஷியமே வடிவெடுத்த உன்னைப்போல உயருவோம் நாட்டுப் பணியில் ஒன்றுவோம்’ என்ற சங்க பாடலில் வருகின்ற வரிகளைப்போன்று முன்மாதிரியான லட்சிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிச் சென்றுள்ள மா.கோ.வைத்ய வாழ்க்கை சங்க கார்யகர்த்தார்கள் அனைவருக்கும் முன்னுதாரணம்.
ஓராண்டு இல்லை ஈராண்டில்லை, ஏன் ஐந்து அல்லது பத்து வருடங்கள் இல்லை. சற்றேறக்குறைய 90 ஆண்டுகள் ஒரு கொள்கைக்காக எந்த பலனையும் எதிர்பார்க்காமல் சுயநலத்திற்கு சிறிதும் இடம்தராமல் பெயர் புகழுக்கு வீழ்ந்துவிடாமல் வாழ்நாளின் இறுதிக் காலம் வரை ஒரே சிந்தனையுடன் ஹிந்து ஒற்றுமைப் பணியில் ஈடுபட்ட மாதவ கோவிந்த வைத்யவின் வாழ்க்கை ஒரு கலங்கரை விளக்காக என்றென்றும் நமக்கு சரியான வழிகாட்டும்.