அன்னை சாரதா தேவியை ஒரு பிச்சைக்காரி அனுதினமும் வந்து தரிசித்துக் கொண்டிருந்தாள். அன்னை சாரதா தேவிக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று அவளுக்கு ஆசை. ஆனால் அவளுடைய பிச்சைப்பாத்திரத்தில் நல்ல உணவே விழுவதில்லை. ஒருநாள் ஒரு வீட்டில், பழங்களை அவளுடைய பிச்சைப் பாத்திரத்தில் போட்டார்கள். அதைப் பார்த்ததும் மகிழ்ந்த பிச்சைக்காரிக்கு அன்னையின் நினைவுதான் வந்தது. அதை அப்படியே எடுத்துக்கொண்டு போய் அன்னையிடம் கொடுத்தாள். அன்னை சாரதா தாயன்பு ததும்ப அந்த பழங்களை வாங்கி ‘‘என் மகளே! பிச்சையாகப் பெற்று வந்து எனக்குக் கொடுத்த இந்த பழங்கள் என்னைப் பொறுத்தவரை தூய்மையானது.’’ என்று சொல்லியவாறே அந்தப் பழங்களை சாப்பிட்டார். அந்தப் பிச்சைக்காரி ஜென்ம ஜென்மாந்திரத்தில் செய்த பாவத்தையும் அவளுடைய துன்பங்களையும், சேர்த்து சாப்பிட்டுத் தீர்த்தாரோ?
பிச்சைக்காரி கண்ணீர் மல்க, ‘‘அன்னையே! இந்தப் பிச்சைக் காரியிடம் இவ்வளவு கருணையா தங்களுக்கு!” என்று கேட்டாள். அதற்கு சாரதா தேவியார் ‘‘சேற்றையும் சகதியையும் ஒரு குழந்தை தன் மீது பூசிக்கொண்டு வந்து நின்றால், தாய் ஓடிச்சென்று அந்தக் குழந்தையை சுத்தம் செய்யமாட்டாளா? அதைப்போல் நான் எல்லோரையும் பரிசுத்தப்படுத்தி என் மடியில் வைத்துக் கொள்வேன்” என்றார்.
சாரதா தேவி தாயுருவில் வந்து நம்மை ஆதரிப்பவள். அன்புடன் அன்னை சாரதா தேவியை அழைத்தால் வருவாள். வந்து அருள் புரிவாள்.