அட்டைப்படக் கட்டுரை:ஜல்லிக்கட்டு சமயச் சடங்கு தடை தொடர்வதா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு பொங்கலுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுவிடும், இதற்கென மத்திய அரசு முனைந்து ஏதாவது செதுவிடும் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறமும், சென்ற ஆண்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்த போதும் அதற்கு மாறாக உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விழாவை தடுத்ததன் காரணமாக விரக்தி ஒருபுறமுமாக மக்கள் தவித்து வருகின்றனர். ஏமாற்றத்தின் விளிம்பிலும், காளைகளை பறிகொடுக்கும் ஆபத்தான நிலையிலும் பல கிராமத்து மக்கள் காத்திருக்கின்றனர்.

தமிழக ஆளும் கட்சியான அதிமுகவும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவும் முயன்றும் நீதிமன்றம் இதற்குத் தடையாக இருப்பது, நீதிமன்றத்தின் அத்துமீறல் என்றே குறிப்பிடலாம். கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்களுக்குப் பதிலாக நீதிமன்றங்கள் எடுப்பது என்பது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. ஆனால் இதே நீதிமன்றங்கள் ஜனநாயகம் பற்றி வகுப்பு எடுப்பதும் உண்டு. இதுதான் வேடிக்கை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரசும் இணைந்துதான் ஜல்லிக்கட்டுக்கு வேட்டு வைத்தன. வேடிக்கை என்னவென்றால் இன்று அக்கட்சியினர்தான் ஜல்லிக்கட்டை நடத்தியாக வேண்டும் என்று போராட்டம் அறிவித்து, மக்கள் முன் வேஷம் கட்டி கூத்து நடத்தி வருகிறார்கள்.

எப்படி தடை செயப்பட்டது ஜல்லிக்கட்டு?

இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966ன் படி, வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவைகளை பொது இடங்களில் துன்புறுத்துவது குற்றமானது. சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை இப்படியலில் சேர்த்தனர். சிலதலைமுறைகளுக்கு முன்பு சர்க்கஸ் காட்சிகளில் இவ்விலங்குகளை பார்த்துவந்த நாம் இன்று பார்க்க முடியாமல் போனதற்குக் காரணம் இச்சட்டமே.

இந்திய பாரம்பரியத்தை நசுக்க வேலை செதுவரும் கூட்டம் ஒன்று நயவஞ்சகமாக காளை மாடுகளை இந்த அட்டவணையில் சேர்க்க வைத்தது. 2011 ல் நடந்த இந்த செயலுக்கு அன்றைய தினம் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஜெராம் ரமேஷ் உடந்தை. தடை ‘காட்டுமிராண்டித்தனமான’ இந்த வழக்கம் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் அறிவித்தார்.

அன்றைய ஆட்சியாளர்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு இதுவே மிகப் பெரிய சான்று. ஜல்லிக்கட்டு காளைகள் வேறு எவ்வித வேடிக்கை காட்சிகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு மாடுகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதில்லை. அவை களத்தில் இருக்கும் நிமிடமே அதிக பட்சம் ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அந்த இரண்டு நிமிடங்களில் அவற்றின் திமிலைக் கைப்பற்றி குறிப்பிட்ட தூரம் தொங்கிப் பயணிப்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இதுவரை எந்தக் காளையும் இதனால் காயமடைந்ததாகவோ ஒரு பதிவும் இல்லை. ஒருபுறம் மதத்தின் பெயரில் பசுக்களை இரக்கமற்று கொன்று வியாபாரம் செய அனுமதிக்கும் சட்டம், மறுபுறம் அதிகபட்சம் இரண்டு நிமிடமே களத்தில் நிறுத்தப்பட்டு வீர விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் காளைகளுக்குத் தடை. என்ன நியாயம் இது ?

உண்மையில் ஜல்லிக்கட்டுக் காளைகள் அந்த ஓரிரு நிமிடங்களுக்காகவே 365 நாட்களும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன. ஏழ்மையில் இருக்கும் குடும்பங்கள் கூட ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதை கௌரவமாக கருதி ஏழ்மைக்கு மத்தியிலும் வளர்க்கின்றனர். ஒரு காளை ஒரு லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை விலை மதிப்பு பெறுகிறது. விலை மதிப்பற்ற ஒரு உயிரை எவ்வாறு பாதுகாக்கிறார்களோ அவ்வாறுதான் அவைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் காளைகளை வளர்ப்பதே ஒரு அலாதியான கலை. இவற்றை ஜல்லிக்கட்டுக்கு பழக்கப்படுத்துவதோ மற்றொரு கலை. ஒவ்வொரு காளையும் அந்தந்தக் குடும்பத்தின் மரியாதைக்குரிய நபர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிருகவதைத் தடுப்பு என்ற பெயரில் கண்மூடித்தனமாக அமலாக்கப்படும் விதிமுறைகளால் மாநிலத்தில் 3,000 இடங்களில் நடந்ந்த ஜல்லிக்கட்டு இன்று எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒரு லட்சம், ஒன்றரை லட்சம் பெறுமான காளைகளை போஷிக்க முடியாமல் அவற்றை மிக மலிவான விலைக்கு விற்கும் நிலைக்கு அக்குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக் காளைகளையும் நாட்டுப் பசுக்களையும் அழிக்கும் சதியாளர்களின் செயலுக்கு இதன்மூலம் வெற்றி கிடைத்துவருகிறது. காளையை அடக்க வேண்டும் என்றால் மிகுந்த உடல் வலிமை வேண்டும். மட்டுமின்றி, தெளிந்த அறிவும் வேண்டும். அப்போதுதான் காளைகளின் போக்கை அறிந்து, அவற்றை அடக்க முடியும். அதே போல் பெண் ஒருத்தியைக் கைப்பிடித்து, இல்லற தர்மத்தில் ஈடுபட நினைக்கும் ஆணுக்கு உடல் பலமும் தெளிவான அறிவும் வேண்டும். அப்படிப்பட்டவன்தான் இல்லறத்தில் உயர்வை அடைகிறான் என்று ஏறு தழுவுதல் ஆட்டத்திற்கு விளக்கம் சொல்வார்கள்.

இதன் மூலம் ஜல்லிக்கட்டு தமிழர் விளையாட்டு மட்டுமல்ல, ஹிந்துக்களின் விளையாட்டு எனப் புரிந்து கொள்ளலாம், கோயில் காளைகள் என்று காளைகள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு தனிநபராலும் உயர்ந்த ஜாதிக் காளைகள் வாங்க முடியாது என்பதால் ஊர்கூடி காளை வாங்கி, கோயில் வளர்த்து வருவதற்குப் பெயர் கோயில் காளை. கோயில் காளை தங்கள் நிலத்தில் நுழைந்தால் யாரும் விரட்டுவதில்லை. மாறாக தங்கள் பாக்கியம் என்கின்றனர். கோயில் காளைகள் ஜல்லிக்கட்டு மைதானத்தை சுற்றிவந்த பிறகுதான் போட்டியே தொடங்கும். சர்சுகளிலும் மசூதிகளிலுமா காளைகளை வளர்க்கின்றனர்?   தமிழர் தமிழர் என்று பேசி மதத் திருவிழாவுக்கு இனவாத சாயம் பூசிய அதீத ஆர்வலருக்கும் ஜல்லிக்கட்டுத் தடையில் பங்கு உண்டு. ஜல்லிக்கட்டுக்கு மதத்தோடு கொண்ட தொடர்பை அறுப்பதன் மூலம் நாட்டுக் காளைகளையும் பசுக்களையும் அழித்துவிடலாம், பாரம்பரியத்தை இழந்து வறுமைக்குத் தள்ளப்படும் குடும்பங்களை மதம் மாற்றவும் செயலாம் என்பது இந்த அந்நிய நிதிபெறும் விலங்குநல ஆர்வலர்களின் திட்டம். உஷார்!

 

 

 

கண்ணன் அடக்கிய காளை

கோசல தேசத்து அரசரான நக்னஜித்திற்கு சத்யா என்று ஒரு மகள். தன்னிடம் உள்ள வலிமை மிக்க ஏழு காளைகளை யார் அடக்குகிறாரோ, அவருக்கு என் மகள் சத்யாவைத் திருமணம் செது கொடுப்பேன் என நக்னஜித் அறிவித்திருந்தார். செதி கேட்ட கண்ணன், அர்ஜுனனும் படைகளும் பின்தொடர, கோசல நாட்டை அடைந்து காளைகளை அடக்கி சத்யாவை மணம்செதான் என்பது வரலாறு. காளையை அடக்கி காரிகையின் கரம் பிடித்த கண்ணனுக்கு தட்சிணையாக 10,000 பசுக்களையும் 9,000 யானைகளையும், 900 தேர்களையும் நக்னஜித் வழங்கியதாக பாகவத புராணம் கூறுகிறது. அதுபோலவே, கும்பகனின் மகள் நப்பின்னையை, ஏழு காளைகளை அடக்கி மணந்தார் கண்ணன். காலநேமி என்னும் அரக்கனின் பிள்ளைகள் ஏழு பேர், கும்பகனின் வீட்டில் காளைகளாக வந்திருந்தனர். இவர்களை அடக்கிக் கும்பகன் மகளை கண்ணன் திருமணம் செது கொண்டார்.

 

 

வாசகர் பார்வை

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக…

முல்லை நிலத்துப் பெண்கள் காளை மாட்டை அடக்கக்கூடிய வலிமை உடையவர்களை மட்டுமே மணம் முடித்தனர்.

‘வெட்சிப் போர்’ என்பது முல்லை நிலத்திலிருந்து ஆநிரைகளைக் கவர்ந்து செல்வது. அதனை மீட்டு வருவதற்கு ‘கரந்தை போர்’ என்று பெயர். இந்த காலத்தில் படித்தவர்கள், சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே பெண் தர முன் வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் வீரத்திற்கு மட்டுமே மரியாதை இருந்தது. பசுக்கூட்டங்களை கரந்தைப் போர் செய்து மீட்டு வரும் வலிமை பெற்றவனையே ஆயர் குலப்பெண் மணக்க விரும்பினாள்.

ஆயர்கள் இயல்பில் அறம் சார்ந்தவர்கள். ஆநிரைகளைக் கள்வர்களிடமிருந்து காப்பாற்றக்கூடிய கட்டாயம் இருந்ததால், மறகுணம் உடையவர்களாக மாறினர். மேலும் ஆயர்கள் காட்டில் வாழ்ந்ததால் புலிகளிடமிருந்து பசுக்களைக் கட்டிக்காப்பது அவசியம். இதன் காரணமாகவும் அறம் சார்ந்த நல்லாயர்கள் மற குணத்தை வளர்த்துக்கொண்டனர். எனவே கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து ‘ஏறு தழுவுதல்’ விழவினை ஏற்படுத்தினர். காளையும் பசுவும் இணைந்தால் தான் கன்றுக்குட்டி உருவாகும். காளையை ஒழித்துவிட்டால் பசுவும் அழிந்துவிடும் என்பதை மாண்புமிகு நீதிபதிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஏறு தழுவுதல் (அந்த விளையாட்டை சிறப்பிக்கும் வண்ணம் பாண்டிய மன்னன்) பொது ஆண்டு 3ம் நூற்றாண்டிலிருந்து சான்றாக வெளியிட்ட ஒரு நாணயம் உள்ளது. அந்த நாணயத்தில் ஒரு பக்கத்தில் காளை மாடும், மறு பக்கத்தில் ‘மாறன்’ என்ற பெயரும் காணப்படுகிறது. இந்த நாணயம் தற்போது தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியிடம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதியை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நான் மாட்டு வண்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டேன். கூலி வேலைக்கு செல்லும் கிராமப் பெண்களை போன்று இடுப்பில் துண்டு, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்றேன். போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.

– நர்மதா நந்தகுமார்

 

 

மாடுபிடி நடத்தச் சொன்னவர் முனியாண்டி சாமி

அலங்காநல்லூரிலுள்ள முனியாண்டி சாமிதான் ஜல்லிக்கட்டு இங்கு நடப்பதற்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அலங்காநல்லூர் பகுதியில் காலரா பரவி மக்களெல்லாம் கொத்துக்கொத்தாக இறந்து போனார்கள். ஊர்க்காரர்கள் தங்கள் காவல் தெய்வமான முனியாண்டியிடம் வந்து கதறியிருக்கிறார்கள். பூசாரிக்கு அருள் வந்து இப்படி அருள்வாக்கு சொன்னாராம் முனியாண்டி: கிராமத்தில மாடு பிடிக்கிறதை நடத்துங்க. அதைப் பார்க்க வர்றவங்களை நான் பலிவாங்கிடுவேன். எங்கேயோ இருந்து வர்றவனும், கடல் கடந்து வர்றவனும் பலியாவான். உள்ளூர்க்காரங்க காப்பாத்தப்பட்டுடுவாங்க. அதன் பிறகே ஊரில் ஜல்லிக்கட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறதாம். இப்போதும் அலங்காநல்லூரில் 5 நாட்கள் நடக்கும் திருவிழா முனியாண்டி சாமி வழிபாட்டுடன்தான் ஆரம்பிக்கிறது. அய்யனாரையும் வணங்குவது நடக்கிறது.

2014 மே 13 ‘தி இந்து’வில் வெளியான

மணா கட்டுரையிலிருந்து