மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் உல்பா பயங்கரவாத அமைப்பினர் இடையே நேற்று முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வன்முறையை கைவிட்டு, அமைதி பாதைக்கு உல்பா அமைப்பு திரும்புகிறது.
‘வடகிழக்கு மாநிலமான அசாமின் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்; மாநில மக்களுக்கான நில உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உல்பா எனப்படும், ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பினர் பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 1980களில், இந்த அமைப்பினரின் தீவிர போராட்டம் காரணமாக, பாதுகாப்பு படையினர், பொதுமக்கள், உல்பா அமைப்பினர் என, 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், உல்பா அமைப்பினருடன் சமீப நாட்களாக, மத்திய, மாநில அரசுகள் பேச்சு நடத்தி வந்தன. அதில், உடன்பாடு எட்டப்பட்டு, உல்பா அமைப்பினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து, அமைதி ஒப்பந்தம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் உல்பா நிர்வாகிகள் முன்னிலையில், புதுடில்லியில் நேற்று கையெழுத்தானது.
இதன் வாயிலாக, அசாமில், ௪௦ ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டு வந்த உல்பா அமைப்பினர், தீவிரவாத செயல்களை கைவிட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்புகின்றனர்.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: அசாமின் எதிர்காலத்துக்கு இது ஒரு பொன்னாள். அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவி வந்த வன்முறை, இதன் வாயிலாக முடிவுக்கு வந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில், ஐந்து ஆண்டுகளில் ஒன்பது அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 9,000த்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்துள்ளனர்.
பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான வாக்குறுதிகள் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். இதற்காக குழு ஒன்று ஏற்படுத்தப்படும்-.
இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “இந்த ஒப்பந்தம் வாயிலாக பழங்குடியின போராளிகளின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு நாட்டின் வளர்ச்சியில் தங்களை இணைத்துக் கொள்வர்,” என்றார்.