ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த 2014-ல் இத்திட்டத்துக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சோதனை விரைவில் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ கடந்த 7-ம் தேதி அறிவித்தது. வாகனத்தை விண்வெளிக்கு அனுப்பி, அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து, வங்காள விரிகுடாவில் இறங்கியதும் அதை அங்கிருந்து மீட்பது ஆகியவற்றை உள்ளடக்கியது இத்திட்டம். இதற்கான ஒத்திகை பணிகளை இந்திய கடற்படை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தவிர பல்வேறு திட்டங்களில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. பூமியின் காலநிலை மற்றும் வானிலையை ஆய்வு செய்யும் திட்டங்களை இஸ்ரோ தொடங்க உள்ளது. தவிர, தகவல் தொடர்பு, ரிமோட் சென்சிங் செயற்கை கோள்கள் உள்ளிட்ட வழக்கமான அறிவியல் பணிகளிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை (டிவி-டி1) அக்.21-ம்தேதி மேற்கொள்ளப்படும். ஹரிகோட்டாவில் இருந்து காலை 7 மணிமுதல் 9 மணிக்குள் விண்வெளி வாகனம் விண்ணில் ஏவப்படும்.செவ்வாய், வெள்ளி, சந்திரனுக்கான ஆய்வுத் திட்டங்களும் எங்களிடம் உள்ளன. சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா எல்-1 திட்டத்தை பொறுத்தவரை அந்த விண்கலம் லாக்ராஞ்சியன் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்கிறது.
அந்த விண்கலம் ஆரோக்கியமாக உள்ளது. தனது 110 நாள் பயணத்தின் நடுப்பகுதியில் உள்ளது. அது எல்-1 புள்ளியை நோக்கி சரியான திசையில் செல்கிறது. ஜனவரி மத்தியில் எல்-1 புள்ளியை அது சென்றடையும். பிறகு எல்-1 புள்ளியில் உள்ள ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் அதை செலுத்துவதற்கான பணியில் நாங்கள் ஈடுபடுவோம். இதன் பிறகு கருவிகள் இயக்கப்பட்டவுடன் அறிவியல் தரவுகளை அளிக்கத் தொடங்கும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.
மகிழ்ச்சியாக தூங்கும் லேண்டர்: நிலவுக்கு மூன்றாவது முறையாக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதிலிருந்து பிரக்யான் ரோவர் கருவி வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. நிலவில் செப்டம்பர் 4-ம் தேதி பகல் பொழுது முடிவடைந்ததால், லேண்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடுக்கு இஸ்ரோ மாற்றியது. இதுகுறித்து சோம்நாத் கூறும்போது, “நிலவில் லேண்டர் மகிழ்ச்சியுடன் உறங்கிக் கொண்டுள்ளது. நிலவின் பகல் பொழுதில் திட்டமிடப்பட்டிருந்த பணிகளை அது வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. அது விரும்பினால் விழித்து எழட்டும். அதுவரை காத்திருப்போம்” என்றார்.