சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, சி.எல்.ஆர்.ஐ., எனப்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், வைக்கோலில் இருந்து உருவாக்கப்பட்ட தோல் மாதிரியை பயன்படுத்தி, பல வகை கைப்பைகள், பர்ஸ் போன்றவற்றை தயாரித்துள்ளது. இதற்கு, இந்திய காப்புரிமை நிறுவனத்திடம் இருந்து, காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. அதன் உரிமத்தை பெற்று, பை உற்பத்தியில் ஈடுபட, பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. சென்னை சி.எல்.ஆர்.ஐ., புதுவித கண்டுபிடிப்புகளில், தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைக்கோலை மூலப்பொருளாக கொண்டு, இயற்கை வேதிப் பொருட்களை பயன்படுத்தி, கைப்பை, ‘கேமரா பேக், லேப் டாப் பேக், மணிபர்ஸ்’ ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இவற்றை, தேவைக்கு ஏற்ற வண்ணங்களில் தயாரிக்கவும் முடியும். இந்த கண்டுபிடிப்புக்கு, சி.எல்.ஆர்.ஐ., தற்போது, இந்திய காப்புரிமை அலுவலகத்திடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ளது.
இந்த காப்புரிமை அனுமதியை வாங்கி, வைக்கோலில் இருந்து உருவாக்கப்பட்ட தோல் மாதிரி பை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, விற்க, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இதுகுறித்து, சி.எல்.ஆர்.ஐ., முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி.தணிகைவேலன் கூறியதாவது:
இயற்கை தோலுக்கு மாற்றாக, செயற்கைத் தோலை பயன்படுத்தியும், பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. செயற்கைத் தோல், ‘பாலியூரிதீன், பாலிவினைல் குளோரைடு’ ஆகிய வேதிப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதனால், செயற்கைத் தோலில் தயாரிக்கப்படும் பொருட்கள் எளிதில் மக்காது. அவை மக்குவதற்கு, 50 – 100 ஆண்டுகளாகும் என்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இதை தடுக்க, ஏற்கனவே மாம்பழக்கூழ் மற்றும் இயற்கையோடு இணைந்த வேதிப்பொருட்களை பயன்படுத்தி, தோல் மாதிரி பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை உற்பத்தி செய்வதற்கான அனுமதி, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, ‘அமாட்டி’ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தற்போது, வைக்கோலை பயன்படுத்தி தோல் மாதிரி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இதனால், வைக்கோல் எரிப்பது தடுக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடைவதும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.